Ashes 2023 : உலக சாம்பியனுக்கு என்னாச்சு – தங்களது ஸ்டைலில் ஆஸி அடித்து நொறுக்கும் இங்கிலாந்து, மாஸ் கம்பேக் நிகழுமா

Zak Crawly ENg vs AUS.jpeg
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான ஆட்டத்தை பின்பற்றி கையில் வைத்திருந்த வெற்றிகளை கோட்டை விட்டதால் விமர்சனத்திற்குள்ளான இங்கிலாந்து சொந்த மண்ணில் அடுத்தடுத்த தலை குனியும் தோல்விகளை சந்தித்தது.

அதனால் இந்த அதிரடியான ஆட்டத்தை தூக்கி எறிந்து விட்டு வழக்கம் போல விளையாடி 28 வருடங்களாக சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை காப்பாற்றுமாறு நாசர் உசேன் போன்றவர்கள் இங்கிலாந்தை விமர்சித்தனர். இருப்பினும் 3 – 0 என்ற கணக்கில் கடந்த காலங்களில் பாகிஸ்தானை தோற்கடித்தது போல் இதே அதிரடி அணுகு முறையில் தங்களால் 3 – 2 என்ற கணக்கில் இத்தொடரை வெல்ல முடியும் என்று கேப்டன் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

- Advertisement -

தொடரும் அதிரடி:
அந்த நிலைமையில் ஹெண்டிங்க்லே நகரில் நடைபெற்ற முக்கியமான 3வது போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்ததுடன் ஆஷஸ் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அந்த நிலையில் இத்தொடரின்முக்கியமான 4வது போட்டி ஜூலை 19ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் 317 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டேவிட் வார்னர் 32, மார்னஸ் லபுஸ்ஷேன் 51, ஸ்டீவ் ஸ்மித் 41, டிராவிஸ் ஹெட் 48, மிட்சேல் மார்ஷ் 51 என அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல துவக்கத்தை பெற்றும் அதை பெரிய ரன்களாக மாற்ற தவறிய நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்பத்திலேயே ஜாக் கிராவ்லி அதிரடியாக ரன்களை குவித்த போதிலும் மற்றொரு தொடக்க வீரர் பென் டூக்கெட் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக மொய்ன் அலி களமிறங்கினார்.

- Advertisement -

இதற்கு முன் லோயர் மிடில் ஆர்டரில் விளையாடிய அவர் இந்த போட்டியில் வித்தியாசமாக 3வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்தார். மறுபுறம் தொடர்ந்து அட்டகாசமாக செயல்பட்ட ஜாக் கிராவ்லி ஒருநாள் கிரிக்கெட்டை போல அதிரடியாக விளையாடி விரைவாக சதமடித்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்தார். அந்த வகையில் 2வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடியில் மொய்ன் அலி 7 பவுண்டரியுடன் 54 (82) ரன்களில் அவுட்டானார்.

அந்த நிலைமையில் வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் தன்னுடைய தரத்தை காட்டிய நிலையில் எதிர்புறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜாக் கிராவ்லி இரட்டை சதத்தை நெருங்கினார். இருப்பினும் 21 பவுண்டரி 3 சிக்சருடன் 189 (182) ரன்களை 103.85 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த அவர் இங்கிலாந்தை 300 ரன்கள் தாண்ட உதவியதுடன் முன்னிலையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவரிலேயே அவருடன் 3வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஜோ ரூட்டும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 84 (95) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சற்று அதிரடியை குறைத்து மெதுவாக விளையாடி 24* ரன்களும் ஹரி ப்ரூக் 14* ரன்களும் எடுத்திருந்த போது 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தற்போதைய நிலைமையில் 384/4 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை விட 67 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து இந்த போட்டியில் வெல்வதற்கான வாய்ப்பு உருவாக துவங்கியுள்ளது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:IND vs WI : வெ.இ மண்ணில் அட்டகாசம் நிகழ்த்தும் ஹிட்மேன் ரோகித் சர்மா, தல தோனியின் ஆல் டைம் சாதனையை உடைத்து புதிய சாதனை

குறிப்பாக முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தும் அதற்காக துவளாமல் கொதித்தெடுத்துள்ள இங்கிலாந்து 3வது போட்டியை போலவே இந்த போட்டியிலும் ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது. மறுபுறம் முதலிரண்டு அதிரடியாக செயல்பட்ட ஆஸ்திரேலியா பின்னர் என்ன ஆச்சு என்பது போல் அடுத்த 2 போட்டிகளில் தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement