இதெல்லாம் சேவாக் 2004லயே பண்ணிட்டாரு – பாகிஸ்தானை பந்தாடி 506 ரன்கள் குவித்தது பற்றி முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கருத்து

ENg Virender Sehwag
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அடுத்ததாக பாகிஸ்தானுக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக 17 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் இத்தொடரில் விளையாடும் இங்கிலாந்து டிசம்பர் 1ஆம் தேதியன்று ராவல்பிண்டி நகரில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று டி20 இன்னிங்ஸ் விளையாடியது என்றே கூறலாம். முன்னதாக புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடிப்படையாக மாறி நல்ல ஃபார்மில் இருக்கும் இங்கிலாந்து பாகிஸ்தான் பவுலர்களை முதல் ஓவரிலிருந்தே அடித்து நொறுக்கியது.

குறிப்பாக 233 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க வீரர்கள் பென் டன்கட் 107 (110) ரன்களும் ஜாக் கிராவ்லி 122 (111) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த ஜோ ரூட் 23 (31) ரன்களில் அவுட்டாக்கி சென்றார். ஆனால் மற்றொரு வீரர் ஓலி போப் தனது பங்கிற்கு சதமடித்து 108 (104) ரன்களும் ஹரி ப்ரூக் சதமடித்து 101* (81) ரன்களும் விளாசினர். அதனால் 75 ஓவர்களிலேயே 506/4 ரன்களை இங்கிலாந்து எடுத்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததால் பாகிஸ்தான் ஓரளவு தப்பியது.

- Advertisement -

சேவாக் பண்ணிட்டாரு:
அதைத்தொடர்ந்து நடைபெற்ற 2வது நாளில் சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் ஹரி ப்ரூக் 153, கேப்டன் ஸ்டோக்ஸ் 41, லிவிங்ஸ்டன் 9 என முக்கிய வீரர்களை விரைவாக அவுட் செய்து 657 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் நாளிலேயே 500 ரன்கள் கடந்த முதல் அணி என்ற உலக சாதனையை படைத்த இங்கிலாந்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற ஆஸ்திரேலியாவின் 112 வருடங்கள் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்தது. இப்போட்டியில் சுமாரான பிட்ச் மற்றும் பவுலிங் மோசமாக இருந்தாலும் அதை பயன்படுத்தி எதிரணியை செட்டிலாக விடாமல் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்தின் அணுகு முறை அனைவரது பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் இந்திய ஜாம்பவான் வீரேந்திர சேவாக் மற்றும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்யூ ஹைடன் ஆகியோர் ஏற்கனவே விளையாடிய அதிரடி அணுகுமுறையை பின்பற்றி இப்போட்டியில் பாகிஸ்தானை இங்கிலாந்து அடித்து நொறுக்கியதாக முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன் பாராட்டியுள்ளார். அதிலும் கடந்த 2004ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணிலேயே முச்சதம் விளாசி சரித்திரம் படைத்த வீரேந்திர சேவாக் 2006இல் ராகுல் டிராவிட் உடன் இணைந்து யாருமே மறக்க முடியாத 410 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

- Advertisement -

அந்த வகையில் வரலாற்றில் வீரேந்திர சேவாக் ஏற்கனவே செய்ததைப் போல் இங்கிலாந்து விளையாடுவதாக பாராட்டிய அவர் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் 2 மணி நேரங்களில் இங்கிலாந்து அதிரடியாக விளையாடியது இந்த போட்டியாகத் தான் இருக்கும். அது பிரத்தியேகங்களை விட மாறிக்கொண்டிருக்கும் ஒரு சகாப்தத்தின் அடையாளமாகும். தற்போதுள்ள அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து அணியை வரலாற்றில் நான் பார்த்ததில்லை”

“இது போன்ற இன்னிங்ஸ் விளையாடும் ஒரு சில வீரர்களை மட்டுமே நான் வரலாற்றில் கண்டுள்ளேன். அதில் முதன்மையானவர் வீரேந்திர சேவாக். அவர் டாப் ஆர்டரில் அதிரடி சரவெடியான இன்னிங்ஸ் விளையாடுவதை பலமுறை நான் பார்த்துள்ளேன். அவரைப் போலவே மேத்தியூ ஹெய்டன். இவர்கள் வரலாற்றில் அதிக ஆதிக்கம் செலுத்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களைப் போல இப்போட்டியில் நிலவிய கால சூழ்நிலைகளை முழுமையாக பயன்படுத்தி பென் டன்கட் – ஜாக் கிராவ்லி ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள்”

“அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் பாகிஸ்தான் திண்டாடியது. எது எப்படி இருந்தாலும் முதல் நாளிலேயே 500 ரன்கள் என்பது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது” என்று கூறினார். முன்னதாக இப்போட்டியில் கூட பேட்டிங்க்கு சாதகமாக இருந்த தார் ரோடு பிட்ச்சில் சுமாராக பவுலிங் இங்கிலாந்து பந்தாடியது. ஆனால் 2004இல் சோயப் அக்தர், சமி, சக்லைன் முஷ்டக் போன்ற தரமான பவுலர்களை கொண்ட பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் அமைக்கப்பட்டிருந்த சவாலான பிட்ச்சில் சேவாக் அடித்து நொறுக்கி முச்சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement