டெஸ்ட் மேட்ச்சில் டி20 ஆடிய இங்கிலாந்து, பாகிஸ்தானை சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி 3 முரட்டு உலக சாதனை

Pak vs ENG Olli Pope
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் 1992 மேஜிக் மீண்டும் நிகழ்த்துவோம் என்று வாயில் மட்டும் பேசி பைனலில் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அடுத்ததாக அதே அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் 17 வருடங்கள் கழித்து முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து களமிறங்கியுள்ளதால் அனைவரது எதிர்பார்ப்பும் அதிகமானது. அந்த நிலைமையில் டிசம்பர் 1ஆம் தேதியன்று ராவில்பிண்டி நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி – பென் டன்கட் ஆகியோர் டெஸ்ட் போட்டி என்பதை மறந்து பவர் பிளே போல ஆரம்பம் முதலே அதிரடியாக குவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையில் சொந்த மண்ணில் அதிரடியாக விளையாடி நியூசிலாந்து, இந்தியா ஆகிய அணிகளை தோற்கடித்த அதே யுக்தியை இப்போட்டியிலும் கையாண்ட இங்கிலாந்து இது டெஸ்ட் போட்டி என்பதை மறக்கும் அளவுக்கு ஒவ்வொரு ஓவரிலும் அதிரடியான பவுண்டரிகளை தெறிக்க விட்டது.

- Advertisement -

3 உலக சாதனை:
அதிலும் குறிப்பாக உலகிலேயே தரமான வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்ட அணி என்று கருதப்படும் பாகிஸ்தான் பவுலர்களை லோக்கல் பவுலர்களைப் போல் அடித்து நொறுக்கிய தொடக்க வீரர்கள் இருவருமே சதமடித்து வெறும் 35.4 ஓவரில் 233 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 15 பவுண்டரியுடன் பென் டன்கட் 107 (110) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் வெளுத்து வாங்கிய ஜாக் கிராவ்லி 21 பவுண்டரியுடன் 122 (111) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஜோ ரூட் சற்று கருணையுடன் 23 (31) ரன்களிலேயே ஆட்டமிழந்து சென்றார். ஏனெனில் அவருடன் களமிறங்கிய மற்றொரு வீரர் ஓலி போப் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடி 14 பவுண்டரியுடன் சதமடித்து 108 (104) ரன்கள் விளாசி மகிழ்ச்சியுடன் அவுட்டானார்.

அப்படி விஸ்வரூபம் எடுத்து புரட்டி எடுத்த இங்கிலாந்தை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நின்ற கேப்டன் பாபர் அசாம் மற்றும் பாகிஸ்தான் பவுலர்களை மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டு தெம்பாக களமிறங்கி அடித்த அண்டர்-19 இளம் வீரர் ஹரி ப்ரூக் தனது பங்கிற்கு கருணை காட்டாமல் வெறித்தனமாக பேட்டிங் செய்தார். அதற்கு முன் சதமடித்த வீரர்களை விட ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை தெறிக்க விட்டு மிரட்டலாக பேட்டிங் செய்த அவர் 14 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதமடித்து 101* (81) ரன்களும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 34* (15) ரன்களும் எடுத்ததால் 75 ஓவரிலேயே 506/4 ரன்கள் கடந்த இங்கிலாந்து 600 ரன்கள் நோக்கி பயணித்தது.

- Advertisement -

நல்ல வேலையாக போதிய வெளிச்சமின்மை ஏற்பட்டதால் முதல் நாள் போட்டி முடிவுக்கு வருவதாக நடுவர்கள் அறிவித்ததை தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களும் ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருப்பினும் 506 ரன்கள் குவித்த இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் நாளிலேயே 500 ரன்கள் கடந்த முதல் அணி என்ற வரலாற்று உலக சாதனை படைத்தது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாளில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற ஆஸ்திரேலியாவின் 112 வருட உலக சாதனையும் தகர்த்து புதிய சாதனை படைத்தது. அந்த பட்டியல்:
1. இங்கிலாந்து : 506/4, பாகிஸ்தானுக்கு எதிராக, ராவில்பிண்டி 2022*
2. ஆஸ்திரேலியா : 496/4, தென்னாபிரிக்காவுக்கு எதிராக, சிட்னி, 1910

அத்துடன் முதல் நாளிலேயே 4 வீரர்கள் சதமடித்து 500 ரன்களை கடக்க உதவியதால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் நாளிலேயே 4 சதத்தை பதிவு செய்த முதல் அணி என்ற புதிய உலக சாதனையும் இங்கிலாந்து படைத்தது. இப்படி சொந்த மண்ணில் மோசமாக செயல்பட்டு இங்கிலாந்திடம் முரட்டு அடி வாங்கிய பாகிஸ்தானை தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement