Ashes 2023 : ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது, அதீத தைரியத்தால் டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து – பரிதாபமான உலக சாதனை

Ben Stokes
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் துவங்கிய 2023 ஆஷஸ் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் பெற்ற ஆஸ்திரலியா தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்து 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. பர்மிங்கம் நகரில் ஜூன் 16ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் நாளிலேயே அதிரடியாக செயல்பட்டு 393/8 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 118* ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா உஸ்மான் கவாஜாவின் பொறுப்பான 141 ரன்கள் சதத்தின் உதவியுடன் 386 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஸ்ட்ரோட் பிராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 7 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து மீண்டும் அதிரடியாகவே செயல்பட முயற்சித்து வெறும் 273 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜோ ரூட் மற்றும் ஹரி ப்ரூக் தலா 46 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ் மற்றும் நேதன் லயன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

அதீத தன்னம்பிக்கை:
அதைத்தொடர்ந்து 281 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் உஸ்மான் கவாஜா 65 ரன்களும் கடைசி நேரத்தில் கேப்டன் கமின்ஸ் 44* ரன்களும் நேதன் லயன் 16* ரன்களும் எடுத்து கடைசி மணி நேரத்தில் வெற்றி பெற வைத்தனர். இந்த தோல்விக்கு முதல் நாளிலேயே அதிரடியாக விளையாடி ஜோ ரூட் 118* ரன்கள் எடுத்ததால் 430 – 450 ரன்களை எடுக்கும் வாய்ப்பை கையில் வைத்திருந்து இங்கிலாந்து டிக்ளேர் செய்து தவற விட்டது முக்கிய காரணமாக அமைந்தது.

அது மட்டுமின்றி 2வது இன்னிங்ஸில் வெறும் 7 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்ற போது 300 – 400 ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்ற பொறுப்புடன் செயல்படாமல் மீண்டும் ஸ்டைலுக்காக அதிரடியாக விளையாடி 280 ரன்களை மட்டுமே முன்னிலையாக பெற்றது இங்கிலாந்துக்கு தோல்வியை கொடுத்தது. முன்னதாக ஜோ ரூட்டுக்கு பின் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான ஆட்டத்தை பின்பற்றும் இங்கிலாந்து சொந்த மண்ணில் இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளை அடித்து நொறுக்கி வெற்றி கண்டு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் சாதிக்க முடியுமா என்ற விமர்சனங்களையும் பாகிஸ்தானை கடந்த டிசம்பரில் அதன் சொந்த மண்ணில் துவம்சம் செய்து தூளாக்கிய இங்கிலாந்து தங்களுடைய அதிரடிப் பாதை சரி என்ற வகையில் இந்த போட்டிகளில் முக்கிய முடிவுகளில் தைரியமாக செயல்பட்டது. ஆனால் உண்மை என்னவெனில் பாகிஸ்தானுக்கு எதிராக தார் ரோட் பிட்ச்களிலும் இந்தியா போன்ற சுமாரான பவுலிங்கையும் கொண்ட அணிகளுக்கு எதிராகவும் அடித்து நொறுக்கியதால் போலியான அதீத தன்னம்பிக்கை பெற்ற அந்த அணி இப்போட்டியில் எடுத்த தவறான டிக்ளர் முடிவே தோல்விக்கு முதன்மை காரணமானது.

பொதுவாக தேவைக்கு அதிகமான ரன்கள் அடித்தால் மட்டுமே டிக்ளர் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால் அதை பொழுதுபோக்குக்காக செய்த இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை மதிக்காமல் தோற்றது என்றே சொல்லலாம். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக கடந்த 2023 பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இதே போலவே 435/8 ரன்கள் குவித்து திடீரென டிக்ளர் செய்த அந்த அணி கடைசியில் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றதை ரசிகர்களால் மறக்க முடியாது.

இதையும் படிங்க:இந்திய அணியின் வருங்கால கேப்டனாக இருக்க அவருக்கே பிரகாசமான வாய்ப்பு – முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கருத்து

அந்த நிலையில் இப்போட்டியிலும் டிக்ளர் செய்து தோற்ற இங்கிலாந்து 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே காலண்டர் வருடத்தில் 2 முறை முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்து தோல்வியை சந்தித்த அணி என்ற பரிதாபமான உலக சாதனையை படைத்துள்ளது. அதனால் ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது என நிறைய ரசிகர்கள் அந்த அணியை சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர்.

Advertisement