இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி ஆனது 40.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்க்ஸை முடித்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்ததால் நிச்சயம் பெரிய ரன் குவிப்பிற்கு செல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்திய அணி ஆரம்பத்திலிருந்தே தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் துவக்க வீரர் ராகுல், புஜாரா, கோலி ஆகிய மூவரையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க வைத்து இந்திய அணியை நிலைகுலைய வைத்தார்.
21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி அந்த சரிவில் இருந்து மீள முடியாமல் இறுதியில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 19 ரன்களும், துணைக்கேப்டன் ரகானே 18 ரன்களை குவித்தனர். இங்கிலாந்து அணி சார்பாக நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் இந்திய அணியை தங்களது சிறப்பான பந்து வீச்சின் மூலம் திணறடித்து முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

இங்கிலாந்து அணி சார்பாக ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், ராபின்சன் 2 விக்கெட்டுகளையும், சாம் கரன் 2 விக்கெட்டுகளையும், ஓவர்டன் 3 விக்கெட்டுகள் என இந்த நால்வரும் இந்திய அணியின் பத்து பேட்ஸ்மேன்களையும் வீழ்த்தி 40.4 ஓவரில் முதல் இன்னிங்க்ஸை முடிவுக்கு கொண்டுவந்து இங்கிலாந்து அணியை பலமான முன்னிலைக்கு கொண்டுவந்துள்ளனர்.

முதல் இன்னிங்ஸில் 78 ரன்கள் மட்டுமே இந்திய அணி குவித்துள்ளதால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் மிகப்பெரிய ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இன்னும் போட்டி 4.5 நாட்கள் இருப்பதனால் தற்போதைய நிலையில் இங்கிலாந்து கையே இந்த டெஸ்ட் போட்டியில் ஓங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



