
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்து 427 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து 143, கஸ் அட்கின்ஷன் 118 ரன்கள் குவித்த நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசித்தா பெர்னாண்டோ 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பின் களமிறங்கிய இலங்கை சுமாராக பேட்டிங் செய்து 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக கமிண்டு மெண்டிஸ் 74 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 2, கஸ் அஃட்கின்ஷன் 2, ஓலி ஸ்டோன் 2, மேத்தியூ போட்ஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் கொஞ்சம் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 251 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் மீண்டும் சதமடித்து 103 ரன்கள் குவித்தார்.
இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசித்தா பெர்னாண்டோ 3, லகிரு குமாரா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இறுதியில் 483 ரன்களை துரத்திய இலங்கை அணிக்கு நிசாங்கா 13, மதுசங்கா 14, கமிண்டு மெண்டிஸ் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல கருணரத்னே 55 ஏஞ்சலோ மேத்யூஸ் 36, தினேஷ் சண்டிமல் 58, கேப்டன் டீ சில்வா 50 ரன்கள் எடுத்து போராடி ஆட்டமிழந்தனர்.
இறுதியில் மிலன் ரத்நாயகே 43 ரன்கள் எடுத்தும் இலங்கையை 293 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பந்து வீச்சில் மீண்டும் அசத்திய அந்த அணிக்கு அதிகபட்சமாக கஸ் அட்கின்ஷன் 5, ஓலி ஸ்டோன் 2, கிறிஸ் ஓக்ஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதன் வாயிலாக கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் 1991க்குப்பின் 33 வருடங்கள் கழித்து இலங்கை தோற்றது.
இதையும் படிங்க: பண்ட் முன்னேறிருக்காரு.. ஓய்வுக்குப் பின் தோனிக்கு அந்த வேலை பொருத்தமா இருப்பாரு.. அம்பயர் சௌத்ரி கருத்து
கடைசியாக 1991ஆம் ஆண்டு அந்த மைதானத்தில் தோற்ற இலங்கை 2024க்கு முன்பு வரை விளையாடிய 5 போட்டிகளை டிரா செய்திருந்தது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் பென் ஸ்டோக்ஸ் இல்லாமலேயே இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்ற இங்கிலாந்து தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்துள்ளது. மேலும் இயன் போத்தமுக்கு பின் (1984) ஒரே போட்டியில் சதமடித்து 5 விக்கெட்டுகள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற மாபெரும் சாதனையை கஸ் அட்கின்ஷன் படைத்தார்.