அசத்தியமான 22 வருட வெற்றியை தைரியத்தால் சாதித்த இங்கிலாந்து – சொந்த மண்ணில் பாகிஸ்தான் மண்ணை கவ்வியது எப்படி

James Anderson PAK vs ENG
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அடுத்ததாக பாகிஸ்தானுக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக 17 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து டிசம்பர் 1ஆம் தேதியான்று ராவல்பிண்டி நகரில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஆனால் இது டெஸ்ட் போட்டி என்று மறக்கும் அளவுக்கு ஆரம்பம் முதலே உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை கொண்ட பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் அடித்து நொறுக்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸில் 657 ரன்கள் குவித்தது.

குறிப்பாக முதல் நாளிலேயே 506 ரன்கள் குவித்த அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் நாளில் 500 ரன்களை கடந்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக இரட்டை உலக சாதனை படைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 122 ரன்களும் பென் டன்கட் 107 ரன்களும் மிடில் ஆர்டரில் ஓலி போப் 108 ரன்களும் ஹரி ப்ரூக் 153 ரன்களும் அதிரடியாக குவித்தார்கள். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஜாஹித் முகமது 4 விக்கெட் எடுத்தார். அதை தொடர்ந்து தார் ரோடு போல இருந்த பிட்ச்சில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் எவ்வளளோ போராடியும் முதல் இன்னிங்ஸில் 579 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

அசத்தியமான வெற்றி:
அதிகபட்சமாக 225 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அசாத் சபிக் 114 ரன்களும் இமாம்-உல்-ஹக் 121 ரன்களும் கேப்டன் பாபர் அசாம் 136 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 6 விக்கெட்கள் எடுத்தார். அதை தொடர்ந்து 78 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து 4வது நாள் தேநீர் இடைவெளியில் 264/7 எடுத்திருந்த போது கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் மெக்கல்லம் ஆகியோர் தங்களது 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தவதாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் தார் ரோடு போல இருந்த அந்த பிட்ச்சில் கிட்டத்தட்ட ஒன்றரை நாளில் 343 என்ற இலக்கு போராடினால் எளிதாக எட்டி விடக்கூடியதாகும்.

மேலும் முதல் நாளில் 506 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்து விட்டு ஏன் இறுதியில் ரிஸ்க் முடிவெடுத்து தோற்க வேண்டும் என்று பெரும்பாலான அணிகள் நிச்சயமாக 400 முதல் 500 ரன்களை இலக்காக நிர்ணயத்திருக்கும். ஆனாலும் மேற்கொண்டு பேட்டிங் செய்தால் வெற்றி பெற முடியாது என்று நினைத்த இங்கிலாந்து ஆனதாகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியமான முடிவை எடுத்தது. அதற்கு முன்பாக அந்த அணிக்கு 2வது இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஜோ ரூட் 73, ஜாக் கிராவ்லி 50, ஹரி ப்ரூக் 87 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை மீண்டும் அதிரடியாக எடுத்தனர்.

- Advertisement -

அதை தொடர்ந்து 343 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு பாபர் அசாம் 4, அசாத் சபிக் 6 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே அவுட்டானாலும் 4வது நாள் முடிவில் 80/2 என்ற நல்ல நிலையில் இருந்தது. அந்த நிலையில் இன்று நடைபெற்ற பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தில் இமாம்-உல்-ஹக் 40, அசார் அலி 40, ஷகீல் 76, முகமத் ரிஸ்வான் 46, சல்மான் 30 என முக்கிய வீரர்கள் நங்கூரமாக நின்று குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினாலும் தார் ரோட் பிட்ச்சிலும் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் வெற்றிக்கு தேவையான அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடவில்லை.

அந்த வகையில் டிராவை நோக்கி விளையாடியை அந்த அணி 258/5 என நல்ல நிலையில் இருந்தாலும் மனம் தளராமல் தைரியமாக பந்து வீசி மடக்கிப் பிடித்த இங்கிலாந்து கடைசி ஒரு மணி நேரத்தில் முக்கிய வீரர்களை காலி செய்து டெயில் எண்டர்களையும் சீக்கிரமே அவுட்டாக்கி 268 ரன்களும் சுருட்டியது. அதனால் 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்து 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஓலி ராபின்சன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்து கடைசி நாளில் அந்த வெற்றியை சாதிக்க முக்கிய காரணமாக இருந்தனர். இப்போட்டி துவங்கிய போது தார் ரோடு போல இருந்த பிட்ச்சில் இரு அணிகளும் தலா 550+ ரன்கள் குவித்ததால் இப்போட்டி டிராவில் முடிவடையும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனாலும் தங்களுடைய 2வது இன்னிங்ஸை சரியான நேரத்தில் தைரியமாக டிக்ளர் செய்து கடைசி நாளில் தில்லுக்கு துட்டு ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்தின் அந்த தைரியமான முடிவே 2000க்குப்பின் 22 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் இந்த அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தது. கடந்த 1961இல் முதல் முறையாக பாகிஸ்தானில் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து கடைசியாக கடந்த 2000இல் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement