மொத்தம் 108 சிக்ஸ்.. உலக சாதனை படைத்த டி20 தொடர்.. வெ.இ அணியை துவம்சம் செய்த இங்கிலாந்து மாஸ் கம்பேக்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத வீழ்ச்சியிலிருந்து கம்பேக் கொடுத்தது. அதை தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளிலேயே வென்ற வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை பெற்றது.

இருப்பினும் 3வது போட்டியில் வென்ற இங்கிலாந்து பதிலடி கொடுத்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அந்த நிலையில் இத்தொடரின் முக்கியமான 4வது போட்டி டிசம்பர் 20ஆம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு ட்ரினிடாட் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

பறந்த சிக்ஸர்கள்:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 10 ஓவர்கள் வரை சரமாரியாக அடித்து நொறுக்கி 117 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஜோஸ் பட்லர் 55 (29) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் மறுபுறம் அதிரடியாக விளையாடிய பிலிப்ஸ் சால்ட் அரை சதம் கடந்த நிலையில் அடுத்ததாக வந்த வில் ஜேக்ஸ் தம்முடைய பங்கிற்கு வெறும் 9 பந்துகளில் 24 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக வந்த லியாம் லிவிங்ஸ்டனுடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை வெளுத்து வாங்கிய பிலிப்ஸ் சால்ட் சதமடித்து 7 பவுண்டரி 10 சிக்சருடன் 119 (57) ரன்கள் குவித்து அவுட்டானர். இறுதியில் லியாம் லிவிங்ஸ்டன் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 54* (21) ரன்கள் எடுத்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் 267/3 ரன்கள் குவித்த இங்கிலாந்து டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது.

- Advertisement -

அதை தொடர்ந்து 268 என்ற கடினமான இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் முதல் பந்திலிருந்தே சீரான இடைவேளைகளில் விக்கெட்டுகளை இழந்து 15.3 ஓவரில் முடிந்தளவுக்கு போராடி 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 51 (25) ரன்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறிய நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதையும் படிங்க: பேட்டிங் பண்ண கஷ்டமான இந்த மைதானத்தில் நாங்க ஜெயிக்க அவங்க 2 பேர்தான் காரணம் – எய்டன் மார்க்ரம் மகிழ்ச்சி

அதனால் 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து 2 – 2* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து தங்களை 2022 டி20 உலகக் கோப்பை வென்ற நடப்பு சாம்பியன் என்பதை நிரூபித்து மாஸ் கம்பேக் கொடுத்துள்ளது. முன்னதாக இந்த போட்டியில் மொத்தம் 33 சிக்சர்கள் அடித்த இரு அணிகளை சேர்ந்த பேட்ஸ்மேன்களும் இத்தொடரில் 4 போட்டிகளையும் சேர்த்து மொத்தமாக 108* சிக்சர்கள் அடித்துள்ளார்கள். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட தொடர் என்ற உலக சாதனையை இந்த வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து தொடர் படைத்துள்ளது. இதற்கு முன் 2022இல் பல்கேரியாவில் நடைபெற்ற சோபியா டி20 தொடரில் 97 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனையாகும்.

Advertisement