ENG vs SL : கைகொடுக்க தவறிய இலங்கை, சொந்த மண்ணில் நூலிழையில் ஆஸியின் கனவை தகர்த்த அந்த 2 காரணங்கள் இதோ

AUs vs ENG BEn Stokes
Advertisement

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அதில் நவம்பர் 5ஆம் தேதியன்று நடைபெற்ற முக்கியமான 39வது லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கையை நிச்சயம் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து எதிர்கொண்டது. அதைவிட சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைப்பதற்காக இப்போட்டியில் இங்கிலாந்து தோற்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா காத்திருந்த நிலையில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Pathum Nishanka SL vs AUS

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் ஒருபுறம் தொடக்க வீரர் பதும் நிசாங்கா அதிரடி காட்ட மறுபுறம் குசால் மெண்டிஸ் 18 (14) டீ சில்வா 9 (11) சரித் அஸலங்கா 8 (9) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அவருக்கு கை கொடுக்காமல் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். அதனால் 84/3 என தடுமாறிய அந்த அணியை முடிந்த அளவுக்கு போராடி காப்பாற்றிய தொடக்க வீரர் நிசாங்கா 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் அதிரடியாக 67 (45) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

போராட்ட வெற்றி:
அப்போது கை கொடுக்க வேண்டிய பனுக்கா ராஜபக்சா 22 (22) ரன்களிலும் கேப்டன் தசுன் சனக்கா 3 (8) ரன்களிலும் அவுட்டாகி ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் சிறப்பாக பினிஷிங் செய்ய முடியாத இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 141 /8 ரன்கள் மட்டுமே எடுத்தது. மறுபுறம் தங்களது அணியின் வெற்றிக்காக தரமாக பந்து வீசிய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 3 விக்கெட்களை சாய்த்தார். அதை தொடர்ந்து 142 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு பவர் பிளே ஓவர்களில் பட்டாசாக செயல்பட்டு 7.2 ஓவரில் 75 ரன்கள் அதிரடியான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ஜோஸ் பட்லர் 2 பவுண்டரி 1 சிக்ருடன் 28 (23) ரன்களில் அவுட்டானார்.

அவருடன் மிரட்டிய மற்றொரு தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 47 (30) ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் அதை பயன்படுத்திய இலங்கை மிடில் ஓவர்களில் ஹாரி புரூக் 4 (5) லியம் லிவிங்ஸ்டன் 4 (6) மொயின் அலி 1 (5) சாம் கரண் 6 (11) என முக்கிய வீரர்களை அடுத்தடுத்த ஓவர்களில் ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்து ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. இருப்பினும் மறுபுறம் நான் இருக்கிறேன் என்ற வகையில் 3வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக நின்ற நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் நிதானமாக செயல்பட்டு தேவையான ரன்களை எடுத்தார்.

- Advertisement -

குறிப்பாக இலங்கையின் அழுத்தத்திற்கு அஞ்சாமல் கடைசி வரை அவுட்டாகாமல் 2 பவுண்டரியுடன் 42* (30) ரன்கள் எடுத்த அவர் 19.4 ஓவரில் இங்கிலாந்தை 144/6 ரன்கள் எடுக்க வைத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். இலங்கையின் சார்பில் அதிகபட்சமாக ஹசரங்கா, குமாரா, டீ சில்வா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தும் வெற்றி பெற வைக்க முடியவில்லை.

இந்த வெற்றியால் சூப்பர் 12 சுற்றின் குரூப் 1 புள்ளி பட்டியலில் பங்கேற்ற 5 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து 7 புள்ளிகளுடன் ரன்ரேட் (+0.473) அடிப்படையில் 2வது இடத்தை பிடித்த இங்கிலாந்து இந்த உலக கோப்பையின் அரையிறுதி சுற்றுக்கு 2வது அணியாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. மறுபுறம் ஆசிய சாம்பியனாக களமிறங்கிய இலங்கை ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை நழுவ விட்ட நிலையில் கடைசி போட்டியிலும் ஆறுதல் வெற்றியை பெறாமல் வீட்டுக்கு கிளம்பியது.

- Advertisement -

அதை விட இலங்கையின் இந்த தோல்வியால் 7 புள்ளிகளை பெற்றும் ரன்ரேட் (-0.173) அடிப்படையில் 3வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்த ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் கோப்பையை முதல் அணியாக தக்க வைக்கும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டு இந்த உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது அந்நாட்டு வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

1. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே 89 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது அந்த அணியின் ரன்ரேட்டை குறைத்து நூலிழையில் அரையிறுதி வாய்ப்பை பறித்தது.

2. அத்துடன் இதே இங்கிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதும் டேவிட் வார்னர் உட்பட முக்கிய வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறியதும் ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

Advertisement