
இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த இந்தியா பதிலடி கொடுத்தது. அதைத் தொடர்ந்து 3வது போட்டி ஜூலை 30ஆம் தேதி லண்டனில் இருக்கும் மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 387 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இந்தியாவும் முடிந்தளவு போராடி 387 ரன்கள் அடித்து ஸ்கோரை சமன் செய்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 100, ரிஷப் பண்ட் 74, ஜடேஜா 72 ரன்களை எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை சிறப்பாக பவுலிங் செய்த இந்தியா 192 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் 193 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் டக் அவுட்டாக்கிய ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் கருண் நாயர் 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்ததாக வந்த கேப்டன் கில் நல்ல ஃபார்மில் இருந்தும் 6 ரன்னில் அவுட்டான போதே இந்தியாவுக்குப் பெரிய அழுத்தம் உண்டானது. போதாகுறைக்கு மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் 9 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் போராடிய ராகுலும் 39 ரன்னில் பெவிலியன் திரும்பிய நிலையில் அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டானார். லோயர் மிடில் ஆர்டரில் போராடிய நித்திஷ் ரெட்டி 13 ரன்னில் அவுட்டானார்.
அதனால் தோல்வியின் பிடியில் சிக்கிய போது ரவீந்திர ஜடேஜா நம்புறமாக விளையாடினார். எதிர்ப்புறம் அவருக்கு கை கொடுக்க முயற்சித்த பும்ரா 35 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் 5 (54) ரன்னில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் ஜடேஜா போராடியதால் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு கடைசியாக வந்த சிராஜும் உடம்பில் அடிகளை வாங்கி கை கொடுத்தார்.
இருப்பினும் 4 (30) ரன்கள் எடுத்த அவர் சோயப் பஷீர் சுழலில் எதிர்கொண்ட பந்தை நன்றாக தடுத்தார். ஆனால் அதிர்ஷ்டம் இல்லாத அந்த பந்து தரையில் பட்டு ஸ்டம்பில் உரசி ஒரு பெய்ல்ஸை கீழே தள்ளியது. அதனால் 170க்கு இந்தியாவை சுருட்டிய இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2 – 1* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதன் காரணமாக மறுபுறம் வீரனாக நின்று போராடிய ஜடேஜா பாறையைப் போல் 61*(181) ரன்கள் எடுத்தும் இந்தியாவால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
இதையும் படிங்க: இங்கிலாந்து வீரருடன் காரசார வார்த்தை மோதலில் ஈடுபட்ட ஜடேஜா.. சமாதானம் செய்த ஸ்டோக்ஸ் – என்ன நடந்தது?
குறிப்பாக லார்ட்ஸ் மைதானத்தில் 1986இல் 134 ரன்களை சேசிங் செய்ததே அங்கு இந்தியாவின் அதிகபட்ச இலக்கை சேசிங் செய்த வெற்றியாகும். அதை விட இம்முறை பெரிய இலக்கை சேசிங் செய்து சாதனை வெற்றியைப் பெறும் போராட்டத்தில் இந்தியா வீழ்ந்தது. அதனால் கண்ணீர் விட்ட சிராஜ் மற்றும் சோகத்தில் ஆழ்ந்த ஜடேஜாவுக்கு இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பாராட்டிய ஆறுதல் வார்த்தைகளை சொன்னார்.