சென்னையில் தோனியிடம் கற்று கொண்டதை பயன்படுத்த போகிறேன் – இந்திய டி20 தொடருக்கு தயாரான தெ.ஆ வீரர்

Dwaine Pretorius MS Dhoni
- Advertisement -

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அதைத் தொடர்ந்து ஜூன் 9-ஆம் தேதி முதல் சொந்த மண்ணில் துவங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா எதிர்கொள்கிறது. அதில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கேஎல் ராகுல் தலைமையில் சமீபத்தைய ஐபிஎல் தொடரில் கலக்கிய நிறைய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெங்களூர் அணியில் பினிஷராக சொல்லி அடித்த தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் 3 வருடங்கள் கழித்து இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

INDvsRSA toss

- Advertisement -

மேலும் ஹைதராபாத் அணிக்காக வேகத்தில் மிரட்டிய 22 வயது ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், பஞ்சாப் அணிக்காக இளம் வயதில் துல்லியமாக பந்து வீசிய அர்ஷிதீப் சிங் ஆகியோர் முதல் முறையாக இந்த தொடரில் தேர்வாகியுள்ளனர். அத்துடன் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் ஆல்-ரவுண்டராக அட்டகாசமாக செயல்பட்டு கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களும் கம் பேக் கொடுத்துள்ளனர்.

ட்வயன் ப்ரிட்டோரியஸ்:
இந்திய வீரர்களை போலவே இதே ஐபிஎல் தொடரில் அசத்திய குயின்டன் டி காக், காகிசோ ரபாடா ஆகிய வீரர்களுடன் குஜராத் அணியில் மிரட்டலாக செயல்பட்ட டேவிட் மில்லர் தென்ஆப்பிரிக்க அணியில் கம் பேக் கொடுத்துள்ளார். அதேபோல் சென்னை அணியில் ஆல் ரவுண்டராக அசத்திய ட்வயன் ப்ரிடோரியஸ் தென்ஆப்பிரிக்க அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

Dwaine Pretorius

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய அவர் மும்பைக்கு எதிராக கடைசி ஓவரில் 16 ரன்களை அடித்து திரில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த தோனியுடன் வெற்றிக்காக பேட்டிங் செய்தார். இந்தியாவிற்காக 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த தோனி வரலாற்றில் அது போல நிறைய போட்டிகளை வெற்றிகரமாக பினிஷிங் செய்த காரணத்தால் மகத்தான பினிஷர் என்று போற்றப்படுகிறார். மும்பைக்கு எதிரான போட்டியில் அவருடன் பேட்டிங் செய்த தருணத்தில் எப்போதுமே டி20 போட்டிகளில் கடைசி ஓவரில் பேட்ஸ்மேன்களை விட பந்து வீசும் பவுலர்கள் தான் அதிக அழுத்தத்திற்கு உள்ளாவார்கள் என்பதை புரிந்து கொண்டதாக தெரிவிக்கிறார்.

- Advertisement -

மகத்தான தோனி:
அது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளில் 18 ரன்களை தேவைப்பட்டால் அதை பேட்ஸ்மேன்கள் அடித்து வெற்றி பெற செய்ய முடியும் என்பதால் ஒரு பவுலராக நீங்கள் தோல்வியை சந்திக்க முடியும். அதுபோன்ற தருணங்களில் அவர் (தோனி) உற்சாகம் அடைவதில்லை, சோர்ந்தும் போவதுமில்லை. அவர் களத்தில் இருக்கும் போது எதுவும் சாத்தியமாகும் என்பதால் அவரை நான் மிகவும் விரும்புகிறேன். அவர் மிகவும் நம்பிக்கையானவர். அவர் தன்னால் எதையும் செய்ய முடியும் என்று நம்புகிறார்” என்று கூறினார்.

dwaine pretorius

அப்படி தோனியுடன் இணைந்து விளையாடியதில் அவரைப் போலவே கடைசிநேர தருணங்களில் பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டிய யுக்தியை புரிந்து கொண்டதாக தெரிவிக்கும் ட்வயன் ப்ரெரிடோரியஸ் விரைவில் துவங்கும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அதை பயன்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவரிடம் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய அம்சம் என்னவெனில் களத்தில் மிகவும் கூலாக இருப்பதுடன் தன் மீது இருக்கும் அழுத்தத்தை எடுத்துவிட்டு அதை எதிரணி பவுலர் மீது போடுகிறார். கடைசி கட்ட ஓவர்களில் எப்போதும் பேட்ஸ்மேனுக்கு அழுத்தம் இருக்காது, பந்துவீச்சாளர் தான் அதிக அழுத்தத்தில் இருப்பார் என்பதை அவர் எனக்கு புரிய வைத்தார்”

“அவரின் அந்த கூலாக இருக்கும் யுக்தியை எனது ஆட்டத்தில் கொண்டுவர முயற்சிக்க உள்ளேன். மேலும் எவ்வளவு கடினமாக இருந்தாலும் சாதிக்க முடியும் என்ற அவரின் தன்னம்பிக்கையையும் பின்பற்ற உள்ளேன். சென்னை போன்ற அனுபவம் வாய்ந்த அணியுடன் விளையாடியது சிறந்த தருணமாகும். கிரிக்கெட் என்பது எப்போதும் உங்களுக்கு வெற்றியை கொடுக்காது என்பதை அங்கு புரிந்து கொண்டேன். இந்த வருடம் சென்னை அணியில் எங்களுக்கு மோசமான தோல்வி கிடைத்தாலும் வருங்காலத்தில் நல்ல அணியை கட்டமைப்பதற்கு தேவையான பாடங்கள் கிடைத்தன. அதை வைத்து அடுத்த வருடம் அல்லது அடுத்த 3 வருடத்திற்கு தேவையான நல்ல அணியை உருவாக்க முடியும் என்பதால் அது மோசமான தோல்வி கிடையாது” என்று கூறினார்.

pretorious

வரும் ஜூன் 9-ஆம் தேதி துவங்கும் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டி டெல்லியில் நடைபெற உள்ளது. அதில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற ட்வயன் பிரிட்டோரியஸ் உட்பட தெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்க அணியினர் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement