ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியும், இதைத்தொடர்ந்து நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணியும் கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற டிசம்பர் 17 முதல் 21 வரை அடிலெய்டில் நடைபெறவுள்ளது.
இதற்காக இரு அணிகளும் முழுமூச்சாக பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலர் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதற்கு பல ஆலோசனைகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டும் இந்திய அணிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அவர் பேசுகையில் : “இந்திய அணி தற்போது மாபெரும் பவுலிங் யூனிட்டை பெற்றுள்ளது. ஆதலால் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு கூட வாய்ப்புண்டு. ஆனால் இந்திய அணியில் பேட்டிங்கில் 500க்கும் அதிகமான ரன்களை அடிக்கப் போவது யார் ? என்பதுதான் முக்கியம். ஒரு வீரர் சிறப்பாக செயல்பட்டு மிகப் பெரிய ஸ்கோரை கொண்டு வந்தால் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது” என்று ராகுல் டிராவிட் ஆலோசனை கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் பயிற்சி போட்டியில் மாயங்க் அகர்வால், சுப்மான் கில், ப்ரித்வி ஷா என மூன்று வீரர்களும் மாற்றி மாற்றி சுழற்சி முறையில் துவக்க வீரராக களம் இறங்கி விளையாடி வந்தாலும் யார் முதல் போட்டியில் தொடக்க வீரர்களாக விளையாடுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது மட்டுமின்றி கோலி இந்தியா திரும்பியதும் அவரது இடத்தில் விளையாடும் வீரர் குறித்த கேள்வியும் எழுந்துள்ளது இந்நிலையில் இந்த தொடரில் அதிக ரன்கள் குவிக்கப்போவது யார் ? எந்த பேட்ஸ்மென் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ;
விராட் கோலி, ரோகித் சர்மா, மாயன்க் அகர்வால், ப்ரித்வி ஷா, கே.எல் ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, அஜிக்னியா ரஹானே, ஹனுமா விஹாரி, சுப்மன் கில், விர்திமான் சஹா, ரிஷப் பண்ட், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது ஷமி, உமேஷ் யாத்து, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ்.