போய் உங்கள் அப்பாவிடம் நேர்மையை கற்றுக்கொள்ளுங்கள் – ஸ்டூவர்ட் ப்ராட்’க்கு முன்னாள் வீரர் சவுக்கடி பதில்

Chris broad 1
- Advertisement -

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டியில் தீப்தி சர்மா ரன் அவுட்டான மாற்றப்பட்டுள்ள மன்கட் முறையில் சார்லி டீனை அவுட் செய்தது உலக அளவில் மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்ற இந்திய மகளிரணி முதலிரண்டு போட்டிகளில் வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில் செப்டம்பர் 24ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 50 ரன்களும் தீப்தி சர்மா 68 ரன்களும் எடுத்தனர்.

அதை துரத்திய இங்கிலாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 35.2 ஓவரில் 118/9 என தடுமாறியது. இருப்பினும் கடைசி நேரத்தில் போராடிய இளம் வீராங்கனை சார்லி டீன் 47 ரன்கள் எடுத்த போது தீப்தி சர்மா வீசிய 44வது ஓவரில் சிங்கிள் எடுப்பதற்காக எதிர்ப்புறமிருந்து பந்து வீசுவதற்கு முன்பாகவே முன்னோக்கி நகர்ந்தார். அதை கவனித்த தீப்தி சர்மா 3வது பந்தில் கச்சிதமாக ரன் அவுட் செய்ததால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து கோப்பையை வென்றது.

- Advertisement -

வெட்கமற்ற ப்ராட்:
அப்படி இந்தியா வென்றாலும் கிரிக்கெட் தோற்றதாக அதை வர்ணனை செய்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசைன் தொலைக்காட்சியில் பேசினார். அத்துடன் நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்ட தீப்தி சர்மாவை ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் சாம் பில்லிங்ஸ் வரை ஏராளமான முன்னாள் இந்நாள் இங்கிலாந்து வீரர்களும் ரசிகர்களும் சரமாரியாக திட்டித் தீர்க்கிறார்கள். ஆனால் ஆரம்ப காலம் முதலே மன்கட் என்ற பெயருடன் நடைமுறையில் இருந்து வரும் அந்த வகையான அவுட் நேர்மைக்கு புறம்பானதாக பார்க்கப்பட்டு வந்தது.

இருப்பினும் பவுலர்கள் ஒரு இன்ச் காலை வெளியே வைத்தாலும் தண்டனையாக நோ-பால் கொடுக்கப்படும் போது பேட்ஸ்மேன்கள் மட்டும் அதை செய்யலாமா என்ற கோட்பாட்டுடன் ஐபிஎல் தொடரில் பட்லரை தைரியமாக மன்கட் செய்த தமிழக வீரர் அஷ்வின் தொடர்ந்து அதற்கு குரல் கொடுத்து வந்தார். அதில் நியாயமும் இருந்ததால் லண்டனின் எம்சிசி அமைப்பு அதை அதிகாரபூர்வ ரன் அவுட்டாக மாற்றி வெளியிட்ட அறிவிப்பை கடந்த வாரம் ஐசிசியும் ஏற்றுக்கொண்டது. அதனால் விதிமுறைக்கு உட்பட்டு செயல்பட்ட தீப்தி சர்மா உங்களைப் போல் தோற்காத நியூசிலாந்தை அதிக பவுண்டரிகளை அடித்தோம் என்ற விதிமுறையை வைத்து ஏமாற்றி 2019 உலகக் கோப்பையை வென்றதை விட மோசமாக செயல்படவில்லை என்று இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

- Advertisement -

முன்னதாக “ரன் அவுட்டா? போட்டியை முடித்த விதம் மோசமாக இருந்தது” என்று தீப்தியின் இந்த செயலை இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் ப்ராட் தனது டுவிட்டரில் விமர்சித்திருந்தார். அதை பார்த்த இந்திய ரசிகர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடந்த ஆஷஸ் தொடரில் அஷ்டன் அகர் வீசிய பந்தில் எட்ஜ் கொடுத்தும் நடுவர் அவுட் கொடுக்காததால் வெளியேற மறுத்த நீங்கள் நேர்மை பற்றி பேசலாமா என்று ப்ராட்க்கு பதிலடி கொடுத்தனர்.

அதே போல் முன்னாள் இந்திய வீரர் டோட்டா கணேஷ் “முதல் ஸ்லிப் பகுதியில் எட்ஜ் கொடுத்துவிட்டு எதுவுமே நடக்காததுபோல் மைதானத்தில் நிற்பது மோசமே தவிர இதுபோன்ற ரன் அவுட் மோசம் கிடையாது. என்னைக் கேட்டால் நடுவர் கிறிஸ் பிராட் (ஸ்டூவர்ட் ப்ராட் தந்தை) அவருடைய மகனுக்கு விதி முறைகளைப் பற்றி பாடங்களை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என சாட்டையடி பதில் கொடுத்தார்.

அதற்கு முன்பாகவே ரசிகர் கொடுத்த பதிலுக்கு “என்னுடன் விளையாடிய 99% வீரர்கள் எட்ஜ் கொடுத்தும் நடுவர் அவுட் கொடுக்காததால் வெளியேற மறுத்ததை நானும் பின்பற்றினேன். ஆனால் நான் விளையாடிய வீரர்களில் 1% மட்டுமே மன்கட் செய்தனர். வாழ்த்துக்கள்” என்று பதிலடி கொடுத்தார். அத்துடன் 2008இல் ஒருமுறை சச்சின் எட்ஜ் வாங்கியும் நடுவர் அவுட் கொடுக்காததால் வெளியேறாததை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்த ப்ராட் அதிர்ஷ்டம் என்ற பெயரில் சச்சின் களத்தில் இருந்ததைப் போன்றே 1000 எடுத்துக்காட்டுகள் தம்மிடம் உள்ளதாக சாட்டையடி பதில் கொடுத்த டோட்டா கணேசுக்கு மீண்டும் பதிலடி கொடுத்தார்.

ஆனால் பலமுறை நடுவர்களின் தவறான தீர்ப்பு மற்றும் சென்னையில் நடுவர் அவுட் கொடுக்காமலேயே எட்ஜ் வாங்கி வெளியேறிய சச்சின் உங்களைப்போல் இப்படி சமூக வலைதளத்தில் பேசவில்லை என்று ப்ராட்க்கு தொடர்ந்து ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement