இந்திய கிரிக்கெட்டில் யாருமே அவர கேள்வி கேட்க மாட்டாங்க.. அம்பத்தி ராயுடு அதிரடி கருத்து

Ambati Rayudu 3
- Advertisement -

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி வரலாறு கண்ட மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். குறிப்பாக இந்திய விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றும் அளவுக்கு அதிரடியாக பேட்டிங் செய்து மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய அவர் நிறைய போட்டிகளில் லோயர் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடி ஃபினிஷராக இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

அப்படி விக்கெட் கீப்பர், ஃபினிஷர் போன்ற பன்முகத்தன்மையை கொண்டிருந்தாலும் தோனியின் கேப்டன்ஷிப் தான் அதிக புகழ் பெற்றதாக இருந்து வருகிறது. ஏனெனில் பொதுவாக மற்றவர்கள் சிந்திப்பதை காட்டிலும் வித்தியாசமாக சிந்திக்கக்கூடிய அவர் களத்தில் பல்வேறு தருணங்களில் தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றிகளையும் கண்டுள்ளார்.

- Advertisement -

யாரும் கேட்க மாட்டாங்க:
எடுத்துக்காட்டாக 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் கடைசி ஓவரில் அனுபவமற்ற ஜோஹிந்தர் சர்மாவை பயன்படுத்தியது முதல் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் ரன்களை வாரி வழங்கி மோசமான பவுலராக செயல்பட்ட இசாந்த் சர்மாவை வைத்தே அவர் வெற்றி கண்டதை சொல்லலாம். இந்நிலையில் கேப்டனாக தோனி எடுக்கும் முடிவுகளை பற்றி இந்திய கிரிக்கெட்டில் யாருமே கேள்வி கேட்க மாட்டார்கள் என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

ஏனெனில் 99.99% தருணங்களில் தோனி தம்முடைய வித்தியாசமான முடிவுகளால் வெற்றிகளை கண்டுள்ளதாக பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் வீரர்களிடம் இருக்கும் சிறந்த திறமையை தோனி வெளிக்கொணர்வார் என்பதை அனைவரும் அறிவார்கள். சொல்லப்போனால் சென்னை அணியில் விளையாடிய சில வெளிநாட்டு வீரர்களின் திறமையை கூட தோனி சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளார்”

- Advertisement -

“அந்தப் பண்பு அவரிடம் இயற்கையாகவே இருக்கிறது. அதை எப்படி வெளிப்படுத்துவது என்பது கூட அவருக்கு தெரியாது. ஒருவேளை அவர் அந்த திறமையை ஆசீர்வாதமாக பெற்றிருக்கலாம் அல்லது நீண்ட காலமாக கிரிக்கெட்டில் விளையாடுவதால் கொண்டிருக்கலாம். பெரும்பாலான தருணங்களில் நான் நினைக்காதவற்றை எப்படி அவர் செய்கிறார் என்று ஆச்சரியமாக பார்ப்பேன். மேலும் நாளின் முடிவில் 99.99% தருணங்களில் அவர் சரியான முடிவுகளையே எடுத்திருப்பார்”

“அதை அவர் நீண்ட காலமாக வெற்றிகரமாக செய்து வருகிறார். அதனால் இந்திய கிரிக்கெட்டில் எந்த இடத்தில் இருக்கும் நபராலும் அவருடைய முடிவுகளை கேள்வி கேட்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவர் நீண்ட காலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார். அவர் கூறுவது போல ப்ராவோ, டு பிளேஸிஸ் வெளிநாட்டு வீரர்கள் தோனி தலைமையில் விளையாடியது தங்களுடைய சர்வதேச கேரியரில் அசத்துவதற்கு உதவியாக இருந்ததாக பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement