உ.கோ ஜெயிக்கணும்னா ஐபிஎல் விளையாடாதீங்க – ரோஹித் சர்மாவுக்கு கொட்டு வைக்கும் அவரது கோச், பேசியது என்ன

DInesh Lad Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் வழக்கம்போல நாக் அவுட் சுற்றில் சொதப்பி பரிதாபமாக வெளியேறிய இந்தியா அடுத்ததாக நியூசிலாந்தில் விளையாடி வருகிறது. அதில் உலக கோப்பையில் சுமாராக செயல்பட்ட கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 கோப்பையை வென்ற இளம் கிரிக்கெட் அணி அடுத்ததாக ஷிகர் தவான் தலைமையில் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் 2024 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்கும் முயற்சியை இந்திய வாரியம் துவங்கியுள்ளது.

இருப்பினும் இந்திய மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அதிலும் ஏமாற்றமான முடிவு கிடைக்கும் பட்சத்தில் 36 வயதை தொட்டுள்ள அவருக்கு பதிலாக ஒருநாள் போட்டிகளிலும் புதிய கேப்டனை நியமிப்பதற்கான வேலைகளை பிசிசிஐ துவங்கியுள்ளது. ஏனெனில் உலக கோப்பையை வென்று தரவில்லை என்பதற்காக விராட் கோலியை கழற்றி விட்டு அவரை கேப்டனாக பிசிசிஐ நம்பி நியமித்தது. ஆனால் அதில் வழக்கம் போல இருதரப்பு தொடர்களை வென்ற அவர் அழுத்தமான ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் வெற்றியை பதிவு செய்யத் தவறினார்.

- Advertisement -

ஐபிஎல் விளையாடாதீங்க:
அதை விட பணிச்சுமை என்ற பெயரில் பெரும்பாலும் ஓய்வெடுக்கும் அவரால் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக நியமிக்க வேண்டிய அவலமும் இந்தியாவுக்கு ஏற்பட்டது. அத்துடன் கேப்டன்ஷிப் பொறுப்பேற்ற பின் பேட்டிங்கில் ரொம்பவே திணறி வரும் ரோகித் சர்மா கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அது போக அவருடன் விராட் கோலி, ஜஸ்பிரிட் பும்ரா போன்ற முக்கிய வீரர்களும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவதும் நாட்டுக்காக பணிச்சுமை என்ற பெயரில் ஓய்வெடுப்பதும் அனைவரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது.

அத்துடன் ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டும் இவர்கள் இந்தியாவுக்காக தடவலாக செயல்படுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் 2023 உலக கோப்பையை வெல்ல வேண்டுமெனில் முக்கிய வீரர்கள் 2023 ஐபிஎல் தொடரில் விளையாட கூடாது என்று ரோகித் சர்மாவின் இளம் வயது பயிற்சியாளர் தினேஷ் லேட் கூறியுள்ளார். மேலும் அடிக்கடி ஓய்வெடுக்காமல் முதலில் கேப்டன் ரோகித் சர்மா தொடர்ச்சியாக அணியுடன் இணைந்து விளையாட வேண்டும் என்று தலையில் கொட்டு வைக்கும் வகையில் சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கடந்த 7 – 8 மாதங்களில் நம்மிடம் நிலையான அணி இல்லை என்று நினைக்கிறேன். நாம் உலக கோப்பைக்காக தயாராக வேண்டுமெனில் முதலில் நிலையான அணியை அமைக்க வேண்டும். ஆனால் கடந்த 7 மாதங்களில் சிலர் திடீரென்று ஓப்பனிங் செய்கிறார்கள், சிலர் திடீரென்று வந்து பந்து வீசுகிறார்கள். அந்த வகையில் தற்போதைய அணியில் நிலைத்தன்மை இல்லை. அதே போல் வீரர்களுக்கு பணிச்சுமை என்ற பேச்சே இருக்கக் கூடாது. ஏனெனில் உலகில் அனைத்து வீரர்களுமே கிரிக்கெட்டை ஒரு வேலையாக செய்யும் போது பணிச்சுமை என்பதை காரணமாக நீங்கள் கூற முடியாது”

“மேலும் சர்வதேச அளவில் விளையாடும் அளவுக்கு உயர்ந்துள்ள நீங்கள் அனைத்து போட்டிகளிலும் காரணங்களை சொல்லாமல் விளையாட வேண்டும். அத்துடன் நாட்டுக்காக விளையாடுவது ஒன்றும் கௌரவ பதவி கிடையாது. அதை கடமையாக வேலையாக நினைத்து சர்வதேச அரங்கில் அர்ப்பணிப்புடன் விளையாட வேண்டும். ஆனால் அதே பணிச்சுமை ஐபிஎல் தொடரால் வருவதில்லையா? உலக கோப்பையை நீங்கள் வெல்ல வேண்டுமெனில் முதலில் ஐபிஎல் தொடரில் விளையாடாதீர்கள். நான் இதைப் பற்றி சொல்லத் தான் முடியும். அதற்கான முடிவு வீரர்கள் கையில் தான் உள்ளது”

“அதற்கு முன்பாக நீங்கள் இந்தியாவுக்காகவும் உங்களுடைய மாநிலத்திற்காகவும் விளையாடிய காரணத்தாலேயே ஐபிஎல் தொடரில் விளையாடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சர்வதேச அரங்கில் சிறப்பாக செயல்பட்டால் தான் ஐபிஎல் தொடரில் உங்களது சம்பளமும் உயரும். அத்துடன் ரோகித் சர்மா அடிக்கடி ஓய்வெடுப்பது தேவையில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் உலக கோப்பைக்கு தயாராக விரும்பினால் முதலில் கேப்டனாக அனைத்து போட்டிகளிலும் பொறுப்புடன் விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement