இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா ஓய்வெடுத்துக் கொண்டுள்ளதால் முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவரும் இந்த ஐந்தாவது போட்டியில் விளையாடி வருகின்றனர். ஏற்கனவே பும்ரா மூன்று போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் அவர் இல்லாமல் விளையாடும் போட்டிகளில் எல்லாம் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்து வருகிறது.
நான் தொடர்ந்து விளையாட இதுவே காரணம் : சிராஜ் விளக்கம்
அதிலும் குறிப்பாக பும்ரா எப்போதெல்லாம் ஓய்வு எடுக்கிறாரோ அப்போது முகமது சிராஜ் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். அந்த வகையில் நடைபெற்று வரும் ஐந்தாவது போட்டியில் பும்ரா இல்லாத வேளையில் முதல் இன்னிங்சில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
மேலும் இந்த தொடர் முழுவதுமே எந்த ஒரு போட்டியிலும் ஓய்வின்றி அவர் விளையாடி வருகிறார். இந்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கும் ஓவல் மைதானத்தில் முகமது சிராஜை நேர்காணல் கண்ட முன்னாள் இந்திய வீரரான தினேஷ் கார்த்திக் பும்ரா இல்லாமல் எப்படி நீங்கள் சிறப்பாக பந்துவீசுகிறீர்கள்? என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முகமது சிராஜ் கூறுகையில் : சீனியர் வீரர் ஒருவர் இல்லாதபோது அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள எனக்கு மிகவும் பிடிக்கும். பும்ரா அவர் இருக்கும் போது அவர் எனக்கு எவ்வாறு பந்துவீச வேண்டும்? என்ற அறிவுரைகளை வழங்குவார். அவர் இல்லாத போது அவர் கூறிய ஆலோசனைகளை வைத்து பந்துவீசுவேன். இருந்தாலும் போட்டியின் போது என்னுடைய பிளான் சிம்பிளாக இருக்கும்.
என்னுடைய பந்துவீச்சில் மட்டுமே கவனம் செலுத்தி பொறுப்பை ஏற்றுக் கொண்டு விளையாடுவதால் விக்கெட்டுகள் கிடைக்கின்றன என்று சிராஜ் கூறினார். மேலும் உங்களால் எப்படி அனைத்து போட்டிகளிலும் விளையாட முடிகிறது? என்று தினேஷ் கார்த்திக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முகமது சிராஜ் கூறுகையில் : எனக்கு என்னுடைய நாட்டை மிகவும் பிடிக்கும். நாட்டுக்காக நான் விளையாடுகிறேன்.
இதையும் படிங்க : பும்ரா விடயத்தில் இந்திய அணி இந்த முடிவை எடுத்தாகனும்.. அதுதான் டீமுக்கு நல்லது – மெக்ராத் கருத்து
எனவே களத்திற்கு வந்து பந்துவீசி காயம் அடைந்து விடுவேனோ என்பது குறித்து எல்லாம் யோசிக்க மாட்டேன். முடிந்த வரை எனது நாட்டிற்காக அனைத்து போட்டிகளிலும் விளையாடி சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே வைத்திருக்கிறேன் என முகமது சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.



