37 வயதில் இந்திய அணியின் கேப்டன் ஆனார் நம்ம தினேஷ் கார்த்திக், எப்படி இது சாத்தியம் – முழுவிவரம் இதோ

Dinesh-Karthik
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா களமிறங்கிய 5-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் துவங்கியது. கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் சந்தித்த விராட் கோலி தலைமையிலான இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்ற போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டியே தற்போது நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியாவின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியின் போது கரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தமாக விலகியுள்ளார். அதனால் ஜஸ்பிரித் பும்ரா இப்போட்டியில் இந்தியாவை வழி நடத்துவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

டி20 தொடர்:
அதை தொடர்ந்து இந்தியாவின் 36-வது டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஜஸ்பிரித் பும்ரா ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் 36 வருடங்கள் கழித்து இந்தியாவை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமை பெற்றுள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. வரும் ஜூலை 5-ஆம் தேதியுடன் நிறைவுபெறும் இப்போட்டிக்கு பின் ஒருநாள் இடைவெளியில் அதாவது ஜூலை 7-ஆம் தேதியன்று இதே இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா களமிறங்குகிறது.

- Advertisement -

அதற்காக நேற்று அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா குணமடைந்து திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியை முடித்துவிட்டு ஒருநாள் இடைவெளியில் டி20 அணியில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இணைய முடியாது என்பதால் அவரது தலைமையில் சமீபத்திய அயர்லாந்து தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் அந்த முதல் போட்டியில் களமிறங்கவுள்ளனர். இருப்பினும் 2, 3 ஆகிய போட்டிகளில் விராட் கோலி போன்ற வீரர்கள் அணிக்கு திரும்புவதால் ருதுராஜ், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி போன்ற வீரர்கள் வெளியேற்றப் பட்டுள்ளார்கள்.

கேப்டன் டிகே:
இந்த டி20 தொடருக்கு பயிற்சி எடுக்கும் வகையில் 2 உள்ளூர் பயிற்சி டி20 போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது. அதாவது பர்மிங்காமில் டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில் ஜூலை 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் டெர்பிஷைர் மற்றும் நாட்டிங்காம்ஷைர் ஆகிய 2 கவுண்டி அணிகளுக்கு எதிராக இந்தியா 2 பயிற்சி போட்டிகளில் பங்கேற்கிறது. தற்சமயத்தில் ரோகித் சர்மா தனிமைப்படுத்தி கொண்டிருப்பதால் சமீபத்திய அயர்லாந்துக்கு எதிராக நடந்த 2 டி20 போட்டிகளில் இந்தியாவை சிறப்பாக வழிநடத்தி 2 – 0 என்ற கணக்கில் கோப்பையை வெல்ல உதவிய ஹர்திக் பாண்டியா இந்த பயிற்சி போட்டிகளிலும் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இந்த 2 போட்டிகளுக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்பட உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியாவின் பணிச்சுமையை கருத்தில் கொண்டும் அணியில் இருக்கும் வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அத்துடன் ஏற்கனவே விஜய் ஹசாரே கோப்பை, சயீத் முஷ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் தமிழகத்தை வழிநடத்தி சாம்பியன் வென்றுள்ள அற்புதமான கேப்டன்ஷிப் அனுபவம் தினேஷ் கார்த்திக்க்கு உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி:
இதை அறியும் தமிழக ரசிகர்கள் மிகவும் பெருமை கலந்தயுடன் மகிழ்ச்சியடைகின்றனர். ஏனெனில் ஒரு கட்டத்தில் வர்ணனையாளர் அவதாரம் எடுத்ததால் இந்திய கேரியர் முடிந்து விட்டதாக கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் 37 வயதிலும் இந்தியாவுக்காக டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தில் ஐபிஎல் 2022 தொடரில் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து 330 ரன்களை 183.33 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை குவித்து பல ஜாம்பவான்களின் பாராட்டுகளைப் பெற்று 3 வருடங்களுக்கு பின்பு மாஸ் கம்பேக் கொடுத்தார்.

- Advertisement -

அதில் தென்ஆப்ரிக்க தொடரில் அசத்திய அவர் ஏறக்குறைய டி20 உலக கோப்பையில் தனது இடத்தையும் உறுதி செய்துள்ள நிலையில் பயிற்சி போட்டியாக இருந்தாலும் தற்போது இந்தியாவின் கேப்டனாக செயல்பட உள்ளது உண்மையாகவே தமிழகத்திற்கு பெருமையாகும். ஏற்கனவே கேஎல் ராகுல், விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 6 வீரர்கள் இந்த வருடம் இந்தியாவை வழி நடத்தியுள்ள நிலையில் தினேஷ் கார்த்திக் 7-ஆவது வீரராக வழி நடத்த உள்ளது ரசிகர்களை கலகலக்க வைக்கிறது.

இதையும் படிங்க : கழுத்த பிடிச்சு வெளியே தள்ளாம தள்ளுனீங்களே இப்போ என்னாச்சு – பிசிசிஐயை விளாசும் விராட் கோலி ரசிகர்கள், காரணம் இதோ

அதில் டெர்பி நகரில் இன்று ஜூலை 1 இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு துவங்கும் டெர்பிஷைர் அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் நார்த்தம்டன் நகரில் ஜூலை 3 இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கும் நார்த்தம்டன்ஷைர் அணிக்கு எதிரான 2-வது போட்டியிலும் தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த போட்டிகளை அந்த 2 கவுண்டி அணிகளின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் தமிழக ரசிகர்கள் நேரலையாக பார்க்க முடியும்.

Advertisement