
வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் நிறைய தடைகளையும் விமர்சனங்களையும் கடந்து இடம் பிடித்துள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த 2004இல் இந்தியாவுக்காக அறிமுகமாகி சற்று சுமாராக செயல்பட்ட இவருக்கு தோனி வந்ததால் இளம் பருவத்தில் நிலையான தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்காமலே போனது. அதிலும் கடைசியாக கடந்த 2019 உலக கோப்பையில் விளையாடியிருந்த அவர் கடந்த 2021இல் வர்ணனையாளராக அவதரித்ததால் அவருடைய இந்திய கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்தனர்.
ஆனாலும் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வந்த அவர் தம்மால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த டி20 உலக கோப்பையில் விளையாடி இந்தியாவுக்கு கோப்பை வெல்ல முடியும் என்று நம்பினார். அதற்காக கடினமான பயிற்சிகளை எடுத்த தம்மை 2022 ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு வாங்கிய பெங்களூரு அணிக்காக லோயர் மிடில் ஆடரில் களமிறங்கி பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் விராட் கோலி, டுப்லஸ்ஸிஸ் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிறைய போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து மிகச்சிறந்த பினிஷராக செயல்பட்டார்.
லட்சிய பயணம்:
அதிலும் ரசல் போன்ற வெளிநாட்டு காட்டடி பேட்ஸ்மேன்களை காட்டிலும் 183.33 என்ற உச்சகட்ட ஸ்டிரைக் ரேட்டில் 330 ரன்களை வெளுத்து வாங்கி தனி ஒருவனாக 3 – 4 வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் “சூப்பர் ஸ்ட்ரைக்கர்” என்ற ஸ்பெஷல் விருதையும் பெற்றார். அவரது ஆட்டத்தை பார்த்து வியந்த ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் உலக கோப்பையில் தேர்வு செய்யமாறு ஆதரவு கொடுத்த நிலையில் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் தேர்வுக்குழு அவரை தாமாக முன்வந்து தேர்வு செய்தது.
அதனால் 3 வருடங்கள் கழித்து அபார கம்பேக் கொடுத்த அவர் தென் ஆப்ரிக்க தொடரில் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அசத்தலாக செயல்பட்டார். அதிலும் 37 வயதுக்கு பின் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற சாதனை படைத்த அவர் வயதை வரும் நம்பராக மாற்றி விளையாடி வருகிறார். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் தேர்வு செய்யப்பட்ட போது சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்றவர்களும் பினிஷிங் செய்வார்கள் என்பதால் அந்த வேலைக்காக மட்டும் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யக்கூடாது என்று சில முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனால் தானோ என்னவோ சூப்பர் 4 சுற்றில் அவரை நம்பாமல் கழற்றி விட்டு ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளித்த அணி நிர்வாகத்துக்கு அடுத்தடுத்த தோல்விகளே பரிசாக கிடைத்தது. அதனால் அவருடைய அருமையை உணர்ந்த தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகம் மீண்டும் இந்த உலக கோப்பையில் தேர்வு செய்துள்ளது. மொத்தத்தில் கடந்த வருடம் இந்நேரம் யாருமே நினைத்துப் பார்த்திராத வகையில் நம்பிக்கையுடன் கடினமாக உழைத்து விடாமுயற்சியுடன் களத்தில் சிறப்பாக போராடிய தினேஷ் கார்த்திக் உலக கோப்பையில் தேர்வாகி தன்னுடைய லட்சிய பயணத்தில் வெற்றி கண்டுள்ளார்.
இந்நிலையில் உலகக் கோப்பைக்கு தினேஷ் கார்த்திக் தேர்வானதில் எங்களை விட யாரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று அவருடைய இந்த வெற்றிக்கு இந்த வருடம் வாய்ப்பளித்து முக்கிய காரணமாக அமைந்த பெங்களூரு அணி நிர்வாகம் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதை பார்த்து நெகிழ்ந்த தினேஷ் கார்த்திக் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துப் பதிலளித்தது பின்வருமாறு.
“மிகவும் நன்றி பெங்களூரு, நீங்கள்தான் என்னுடைய பயணத்தில் முக்கிய அங்கமாக இருந்து என்னுடைய கனவில் வெற்றி காண முக்கிய காரணமாக இருந்தீர்கள். அதைவிட பெங்களூருவுக்கு விளையாடும்போதும் இந்தியாவுக்காக விளையாடும் போதும் ஆர்சிபி ஆர்சிபி ஆரவாரத்தை வெளிப்படுத்தி ஆதரவு கொடுத்த பெங்களூரு ரசிகர்கள் முக்கியமானவர்கள். ஐ லவ் யூ கைஸ்” என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் தமக்கு உதவிகரமாக இருந்த சஞ்சய் பங்கர், மைக் ஹெசன் போன்ற பயிற்சியாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.