257 போட்டிகள்.. 4842 ரன்ஸ்.. வாழ்த்திய கோலி.. பிரியா மனதுடன் விடைபெற்ற டிகே.. ஐபிஎல் சாதனைகள் இதோ

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எலிமினேட்டர் போட்டியுடன் வெளியேறியது. இந்த வருடம் முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு கடைசி 6 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றது. குறிப்பாக கடைசி போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை தோற்கடித்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்ததால் ஆர்சிபி கோப்பையை வெல்லும் என்று அனைவரும் நம்பினர்.

ஆனால் மே 22ஆம் தேதி நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி தோல்வியை சந்தித்தது. அதனால் 2008க்குப்பின் தொடர்ந்து 17வது வருடமாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் ஆர்சிபி அணி பரிதாபமாக வெளியேறியது. அதன் காரணமாக விராட் கோலி மற்றும் ஆர்சிபி ரசிகர்கள் மனதளவில் உடைந்து சோகமடைந்துள்ளனர்.

- Advertisement -

விடைபெற்ற டிகே:
இதற்கிடையே ஐபிஎல் தொடரிலிருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்ட போது டெல்லி அணியில் தம்முடைய கேரியரை துவக்கிய அவர் அதன் பின் பஞ்சாப், மும்பை, குஜராத், கொல்கத்தா மற்றும் பெங்களூரு என மொத்தம் 6 அணிகளுக்காக 17 வருடங்களில் 257 போட்டிகளில் விளையாடி 4842 ரன்களை எடுத்துள்ளார்.

மேலும் மும்பை அணியில் 2013ஆம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ள அவர் 2022 சீசனில் பெங்களூரு அணியில் அற்புதமாக விளையாடி இந்திய அணியில் கம்பேக் கொடுத்ததை யாராலும் மறக்க முடியாது. இருப்பினும் தற்போது 38 வயதை கடந்து விட்டதால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அந்த சூழ்நிலையில் எலிமினேட்டரில் பெங்களூரு தோல்வியை சந்தித்ததால் கலங்கிய கண்களுடன் பிரியாத மனதுடன் தினேஷ் கார்த்திக் ரசிகர்களின் பாராட்டுக்கு மத்தியில் விடை பெற்றார்.

- Advertisement -

அவருக்கு விராட் கோலி கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். மைதானத்தில் இருந்த ரசிகர்களும் எழுந்து நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் அவருடைய சில ஐபிஎல் சாதனைகளைப் பற்றி பார்ப்போம். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 17 தொடர்களிலும் விளையாடிய 7 வீரர்களில் ஒருவராக தினேஷ் கார்த்திக் சாதனை படைத்துள்ளார்.

இதுவரை 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய 2வது வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். 2018 – 2020 வரை கொல்கத்தா அணியை தலைமை தாங்கிய அவர் கேப்டனாக 19 வெற்றிகளை பெற்றுள்ளார். அதனால் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக அதிக வெற்றிகளை பதிவு செய்த 2வது கேப்டன் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: சிஎஸ்கே ரசிகர்கள் சார்பாக.. ஒற்றைப் பதிவால் மொத்த ஆர்சிபி ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தேஷ்பாண்டே

அத்துடன் ஐபிஎல் தொடரில் தோனிக்கு (190) பின் அதிக விக்கெட்டுகளை (174) எடுத்த 2வது விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் தினேஷ் கார்த்திக் படைத்துள்ளார். அத்துடன் தினேஷ் கார்த்திக் மற்றும் தோனி ஆகியோர் மட்டுமே ஐபிஎல் வரலாற்றில் 4000+ ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர்களாக சாதனை படைத்துள்ளனர்.

Advertisement