தடைகள், விமர்சனங்களை தாண்டி லட்சியத்தில் பாதி வென்ற தமிழக வீரர் – ரசிகர்கள் மகிழ்ச்சி, வாழ்த்திய பாண்டியா

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக கடந்த வருடம் முழுநேர கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோரது தலைமையில் பங்கேற்ற அத்தனை இருதரப்பு டி20 தொடர்களிலும் வென்ற இந்தியா உலகின் நம்பர் ஒன் 20 அணியாக முன்னேறியது. அதனால் மகிழ்ந்த ரசிகர்களுக்கு 2022 ஆசிய கோப்பையில் பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் இந்தியா வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது. அந்த தோல்விக்கு தவறான தேர்வு என்பதையும் தாண்டி பினிஷெராக விளையாட தேர்வு செய்யப்பட்ட தினேஷ் கார்த்திக்கை வெறும் 1 பந்து மட்டுமே சந்தித்திருந்த நிலையில் அதிரடியாக நீக்கியது முக்கிய காரணமாக அமைந்தது.

ஏனெனில் சூப்பர் 4 சுற்றில் தோற்றதற்கு 15 – 20 ரன்கள் குறைவாக இருந்ததை கேப்டன் உட்பட அனைவருமே ஒப்புக்கொண்ட நிலையில் அந்த ரன்களை அடிக்கக் கூடிய தினேஷ் கார்த்திக்க்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டு ரிஷப் பண்ட் வழக்கம் போல சொதப்பி தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதனால் கேப்டன் ரோகித் சர்மா உட்பட அனைவரும் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள நிலையில் டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

லட்சியமும் விமர்சனமும்:
ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் குணமடைந்து திரும்பியுள்ளனர். இருப்பினும் ஜடேஜா காயத்தால் வெளியேறிய நிலையில் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. அதேபோல் சஞ்சு சாம்சன் கழற்றிவிடப்பட்டதும் ஷமி, தீபக் சஹர் ஆகியோர் ஸ்டாண்ட் பை லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளதும் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

மறுபுறம் இந்த அணியில் மீண்டும் தேர்வாகியுள்ள தினேஷ் கார்த்திக் தனது லட்சியத்தில் பாதி வெற்றி கண்டுள்ளார் என்றே கூறலாம். ஏனெனில் ஜாம்பவான் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் தோனி இருந்ததால் ஆரம்ப காலங்களில் தொடர்ச்சியாக வாய்ப்பு பெறாத அவர் கடைசியாக கடந்த 2019 உலக கோப்பையில் விளையாடி ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக பணியாற்றினார்.

- Advertisement -

அதனால் அவருடைய இந்திய கேரியர் முடிந்ததாக அனைவரும் நினைத்தாலும் தம்மால் டி20 கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்று நினைத்த தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் கடுமையான பயிற்சிகளை எடுத்து ஐபிஎல் 2022 தொடரில் விராட் கோலி போன்ற நம்பிக்கை நட்சத்திரங்கள் ஏமாற்றி ஏற்படுத்திய சரிவை லோயர் மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்து தாங்கிப் பிடித்தார். அதிலும் 330 ரன்களை ரசல் போன்ற காட்டடி பேட்ஸ்மேன்களை காட்டிலும் 183.33 என்ற அதிகபட்ச ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் அதற்காக சூப்பர் ஸ்ட்ரைக்கர் என்ற ஸ்பெஷல் விருதையும் வென்றார்.

அதனால் 3 வருடங்கள் கழித்து தாமாக இந்திய அணிக்குள் நுழைந்த அவர் தென்ஆப்பிரிக்க டி20 தொடரில் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். அதன்பின் நடந்த இங்கிலாந்து டி20 தொடரில் சுமாராக செயல்பட்டாலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் அசத்திய அவர் டி20 கிரிக்கெட்டில் 37 வயதுக்குப் பின் 2 ஆட்டநாயகன் விருதுகளையும் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையுடன் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால் ஆசிய கோப்பையில் தேர்வு செய்யப்பட்ட போது சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் பினிஷிங் செய்வார்கள் என்பதால் அந்த வேலைக்காக மட்டும் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யக்கூடாது என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்ற தமிழக முன்னாள் வீரர்களே விமர்சித்தனர்.

ஆனால் அனைவராலும் அந்த வேலையை செய்ய முடியாது என்பதை இந்த ஆசிய கோப்பை தோல்வி நிரூபித்துக் காட்டியது. அந்த வகையில் டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முயற்சியுடன் லட்சிய பயணத்தை தொடங்கிய தினேஷ் கார்த்திக் அதில் விளையாடுவதற்கான இடத்தை பிடித்து பாதி வென்றுள்ளார். இதனால் கனவுகள் நிஜமாகும் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவருக்கு நட்சத்திர வீரர் பாண்டியா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவருடைய இந்த லட்சிய பயணத்தில் மீதி வெற்றியை ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று முழுமையாக்குவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement