இலங்கைக்கு எதிராக 27 வருடங்கள் கழித்து இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்தது. கடந்த வாரம் கொழும்புவில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே கையில் வைத்திருந்த வெற்றியை நழுவ விட்ட இந்தியா சமன் செய்தது. ஆனால் அதற்கடுத்த 2 போட்டிகளில் இன்னும் மோசமாக விளையாடிய இந்தியா 14 வருடங்களுக்கு இலங்கைக்கு எதிராக அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
அந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் இலங்கை ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மாவை தவிர்த்து விராட் கோலி உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. அத்துடன் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடுவதற்கு கூட இலங்கை தகுதி பெறவில்லை.
தோல்வியை பாக்காதீங்க:
ஆனால் அப்படிப்பட்ட அணியிடம் தோற்ற இந்தியா எப்படி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்லப்போகிறது என்ற கவலை ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் இலங்கைத் தொடரில் சந்தித்த தோல்வியை மட்டும் பார்க்காமல் ரியான் பராக் அறிமுகமாக களமிறங்கி ஆல் ரவுண்டராக வெளிப்படுத்திய நல்ல செயல்பாடுகளையும் பார்க்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடியதையும் நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரில் இந்தியா ஆல் ரவுண்டர்களை விளையாட வைத்து எதிரணியை தைரியத்துடன் அட்டாக் செய்ய முயற்சித்தது மிகப்பெரிய நேர்மறையான விஷயமாகும். அதை நான் மிகவும் விரும்பினேன்”
“2வதாக ரியான் பராக் தமக்கு கிடைத்த சிறிய வாய்ப்பில் பந்து வீச்சில் எந்தளவுக்கு அசத்த முடியும் என்பதை காண்பித்தது மற்றொரு நேர்மறையான விஷயமாகும். இதைத் தவிர்த்து ரோகித் சர்மாவின் பேட்டிங். பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்த அவர் சவாலான இந்தத் தொடரிலும் பேட்டிங் செய்வது எளிது என்பதை காண்பித்தார். எனவே இது போன்ற நேர்மறையான அம்சங்களும் அத்தொடரில் இருந்தன”
இதையும் படிங்க: பாவம் தப்பே செய்யாத அவரை ட்ராப் பண்ணிட்டாங்க.. வெற்றி ஜோடியை பிரிச்சுடீங்க.. ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
“ஆரம்பத்தில் சொன்னது போல வாசிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே போன்றவர்கள் ஆல் ரவுண்டராக தங்களால் முடிந்தளவுக்கு வெற்றிகளில் பங்காற்ற முயற்சித்ததையும் பார்க்க வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து அடுத்த ஒரு மாதத்திற்கு இந்திய அணி எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை. அடுத்ததாக செப்டம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் இந்தியா களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



