இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் சில அதிரடியான மாற்றங்களை ஆரம்பத்திலேயே கொண்டு வந்துள்ளார். முதலாவதாக ஓய்வு பெற்ற ரோகித் சர்மாவுக்கு பின் புதிய டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பை உட்பட சமீப காலங்களில் பாண்டியா தான் துணை கேப்டனாக செயல்பட்டு வந்தார்.
இருப்பினும் பாண்டியா காயத்தால் இந்தியா விளையாடும் அனைத்து தொடர்களிலும் விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. எனவே 2026 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு முழுமையாக விளையாடக்கூடிய சூரியகுமாரை புதிய கேப்டனாக கெளதம் கம்பீர் பரிந்துரைத்துள்ளார். அதே போல ரஞ்சிக் கோப்பையில் விளையாடாத ஸ்ரேயாஸ் ஐயரை பிசிசிஐ அதிரடியாக நீக்கியிருந்தது.
டிகே நம்பிக்கை:
ஆனால் 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா அணிக்காக வென்ற அவரை கம்பீர் மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வந்துள்ளார். அதே சமயம் சுப்மன் கில்லை துணை கேப்டனாக நியமித்தது அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை கழற்றி விட்டது போன்ற கம்பீரின் சில முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கௌதம் கம்பீர் இந்திய அணியில் பயிற்சியாளராக 2 மாற்றங்களை கொண்டு வருவார் என்று தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் சிறந்த நல்ல தலைவர். அவர் இந்திய அணியில் 2 விஷயங்களை கொண்டு வருவார் என்று நினைக்கிறேன். முதலில் அவர் வீரர்களின் மனிதர். அவர் தன்னுடைய வீரர்களை பாதுகாப்பார். அதுவே சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் முக்கியம். ஏனெனில் சிறப்பாக செயல்படாத போது நீங்கள் தனிமையாக அல்லது வெறிச்சோடியதாக உணரலாம்”
“எனவே கம்பீர் தனது வீரர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அதை உணர விட மாட்டார். இரண்டாவதாக கண்டிப்பாக அவர் இந்திய அணிக்கு ஒரு புத்திசாலித்தனமான தந்திரோபாய கோணத்தை கொண்டு வருவார். போட்டியை கொடுக்கக்கூடிய நபரான அவர் எப்போதும் அணிக்காக விளையாடுவதை விரும்புவார். எனவே அனைத்து வீரர்களையும் அவர் அணிக்காக விளையாட வைத்து வெற்றியை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பார்” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து ஜூலை 27ஆம் தேதி துவங்கும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. அந்தத் தொடரில் இருந்து கௌதம் கம்பீர் இந்திய அணியுடன் சேர்ந்து பயிற்சியாளராக செயல்பட உள்ளார். எனவே பயிற்சியாளராக களத்தில் அவர் என்ன மாற்றங்களை செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.



