
தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரோடு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான தினேஷ் கார்த்திக் நடைபெற்று முடிந்த சீசன் வரை அனைத்து சீசன்களிலுமே விளையாடி 257 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அதேபோன்று கடந்து 2004-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாடிய அனுபவம் உடைய தினேஷ் கார்த்திக் நேற்று தனது பிறந்த நாளன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன்படி ஜூன் 1-ஆம் தேதி நேற்று தனது 39-வது பிறந்த நாளை கொண்டாடிய தினேஷ் கார்த்திக் பிறந்தநாள் அன்று தான் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக எமோஷனலாக வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ள அந்த பதிவில் : என்னுடைய இந்த நீண்ட பயணத்தை இனிமையாகவும், சுவாரசியமாகவும் மாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சக வீரர்கள், தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள், கேப்டன்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி.
மில்லியன் கணக்கானோர் விளையாடும் இந்த நாட்டில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு எனக்கும் கிடைத்ததை நினைத்து அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகளாக எனக்கு துணையாகவும், தூணாகவும் இருந்த என்னுடைய பெற்றோர்கள் ஆசிர்வாதம் இல்லாவிட்டால் நான் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது.
இதையும் படிங்க : டி20 உலககோப்பையை நாங்க ஜெயிச்சே ஆகனும்.. நியாயமான கருத்தை முன்வைத்த – வெ.இ கேப்டன் ரோவ்மன் பவல்
அதேபோன்று எனக்காக துணை நின்ற தீபிகாவுக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். கிரிக்கெட் களத்தை விட்டு வெளியேறினாலும் அது தொடர்பான பணிகளையே மேற்கொள்ள இருக்கிறேன் என தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.