4வது போட்டியின் முடிவுகளை கச்சிதமாக முன்கூட்டியே கணித்த டிகே – ரசிகர்கள் வியப்புடன் பாராட்டு

DInesh Karthik.jpeg
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஐசிசி தரவரிசையில் உலகின் டாப் 2 இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகள் மோதி வரும் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. இருப்பினும் 3வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் கொதித்தெழுந்து வென்ற ஆஸ்திரேலியா ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்து நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றது. அதனால் அகமதாபாத் நகரில் மார்ச் 9ஆம் தேதி துவங்கி நடைபெறும் கடைசி போட்டியில் வென்றால் தான் ஃபைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலைமையில் இந்தியா விளையாடி வருகிறது.

அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா பிளாட்டான பிட்ச்சில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி 480 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 180 ரன்களும் கேமரூன் கிரீன் 114 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய எங்களது சொந்த ஊரில் நாங்களும் சளைத்தவர்களா என்ற வகையில் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 571 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தது.

- Advertisement -

டிகே கணிப்பு:
இந்தியாவுக்கு அதிகபட்சமாக விராட் கோலி 3 வருடங்கள் கழித்து சதமடித்து 186 ரன்களும் தொடக்க வீரர் சுப்மன் கில் 128 ரன்களும் எடுக்க கூடவே அக்சர் பட்டேல் 79, கேஎஸ் பரத் 44 என இதர முக்கிய பேட்ஸ்மேன்களும் நல்ல ரன்களை எடுத்தனர். அதனால் 4வது நாள் முடிவில் 3/0 என்ற ஸ்கோருடன் விளையாடி வரும் ஆஸ்திரேலியா 88 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் கடைசி நாளில் முடிந்தளவுக்கு விரைவாக ஆல் அவுட்டாக்கி மேஜிக் வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற இந்தியா போராட உள்ளது.

இருப்பினும் தற்சமயத்தில் இப்போட்டி டிராவில் முடிவடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. முன்னதாக இந்த தொடரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட்டு போட்டிகளின் நுணுக்கமான விஷயங்களை ரசிகர்களுக்கு புரியும் வகையில் பேசி வருவது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும் பிரபல கிரிக்பஸ் இணையத்தில் வல்லுனராகவும் செயல்பட்டு வரும் அவரிடம் இப்போட்டி துவங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலியா எவ்வளவு ரன்கள் அடிக்கும் என்று பிரபல தொகுப்பாளர் ஹர்சா போக்லே கேட்டார்.

- Advertisement -

அதற்கு இத்தொடரில் “இந்தியா ஆஸ்திரேலியாவை 360 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நினைக்கும். ஆனால் அவர்கள் அதையும் தாண்டி வாய்ப்புள்ளது” என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்தார். அதே போல் 2வது நாள் முடிவில் இந்தியா எத்தனை விக்கெட்கள் இழந்திருக்கும் என்று ஹர்ஷா போக்லே கேட்டார். அதற்கு “இந்திய அணியின் கண்ணோட்டத்தில் அவர்கள் 3 விக்கெட்டுகளுக்கு மேல் இழக்க மாட்டார்கள்” என்று கூறினார். இறுதியில் அவர் சொன்னது போலவே முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 360 ரன்களை தாண்டி 480 எடுத்த நிலையில் 2வது நாள் முடிவில் மீண்டும் அவர் சொன்னது போல இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 289/3 ரன்கள் எடுத்தது.

அப்படி அவருடைய கணிப்புகள் கிட்டத்தட்ட அச்சு அசலாக நடந்ததால் வியப்படைந்த க்ரிக்பஸ் அந்தப் பிரத்தியேக தருணங்களை வீடியோவாக உருவாக்கி அதில் பிரபல நகைச்சுவை காட்சியை இணைத்து கலாய்த்து தினேஷ் கார்த்திகை பாராட்டியுள்ளது. குறிப்பாக கடைசியில் தினேஷ் கார்த்திக் கணிப்பதில் கிங் என்பதால் நாம் தலைவணங்க வேண்டும் என்றும் கிரிக்பஸ் இணையம் பாராட்டியுள்ளது. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தினேஷ் கார்த்திக் நன்றி தெரிவித்துள்ளார்.

அதே போல் 2வது நாளில் 2 இந்திய வீரர்கள் சதமடிப்பார்கள் என்று ட்விட்டரில் அவர் மார்ச் 11ஆம் தேதி வெளியிட்ட கணிப்பும் கிட்டத்தட்ட கணிப்பும் 2 நாட்களில் நடந்து உண்மையானது. அதைப் பார்த்து வியப்படையும் ரசிகர்கள் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை தாண்டி மிகச்சிறந்த வர்ணனையாளராக வல்லுனராக நீங்கள் அசத்துவதாக தினேஷ் கார்த்திக்கை பாராட்டி வருகிறார்கள்.

Advertisement