இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாடி வருகிறது. 3 ஒருநாள் தொடரில் இரண்டு முறை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, இந்திய அணி டி20 தொடரில் இரண்டு முறை வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்கள் மட்டும் எடுத்து படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியாவின் தோல்வி குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது முதல் குழந்தை பிறப்பிற்காக இந்தியா திரும்பவுள்ளதால், மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த முகமது சமி பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் முகமது சமியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இவரும் தற்போது விலகியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்கார் விராட் கோலி அணியில் இல்லாத நிலையில் மேட்ஸ்மங்களுக்கு ஆலோசனை கூறும் வகையில் ராகுல் டிராவிட்டை ஆஸ்திரேலியாவிற்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் கூறுகையில் “ இந்திய அணிக்கு பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்பி வைக்க வேண்டும். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக எவ்வாறு பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து வழிகாட்ட அவரால் மட்டுமே முடியும். ராகுல் டிராவிட்டின் வருகை வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீரருக்கு கண்டிப்பாக உதவிகரமாக இருக்கும். விராட் கோலி இல்லாத நிலையில் ராகுல் டிராவிட் வீரர்களுக்கு சிறந்த நம்பிக்கையாக இருப்பார்.
14 நாட்கள் தனிமைப்படுத்தினாலும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான வலைப்பயிற்சியில் கலந்துகொள்ள முடியும். ஆஸ்திரேலிய போன்ற மைதானங்களில் அதிகமாக பந்து ஸ்விங் ஆகி நகர்ந்து வரும் அப்படி நகர்ந்து வரும் பந்துகளை கணித்து விளையாடுவதற்கான ஆலோசனையை அவரால் வழங்க முடியும். அது இந்திய வீரர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்” என்று திலிப் வெங்சர்க்கார் கூறியுள்ளார். இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக இருந்த டிராவிட் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.