2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி வெளியான அந்த பட்டியலில் சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்ட வேளையில் துணை கேப்டனான சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் : திலீப் வெங்சர்க்கார்
சமீபத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்த சுப்மன் கில் டி20 போட்டிகளிலும் துணை கேப்டனாக இருந்து பின்னர் சூரியகுமார் யாதவுக்கு பிறகு கேப்டனாக மாறுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திடீரென அவர் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இருந்தாலும் பேட்டிங் பார்ம் இன்றி தவிக்கும் அவரை உலகக்கோப்பை அணியிலிருந்து நீக்கியது சரிதான் என்று சிலர் தங்களது ஆதரவுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான திலிப் வெங்சர்க்கார் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் சுப்மன் கில்லை தேர்வு செய்யாதது சரிதான் என்று தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அவருக்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை தேர்வு செய்திருக்கலாம் என்று தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மூன்று வகையான இந்திய அணியிலும் இடம் பிடிக்கும் தகுதி அவரிடம் உள்ளது.
என்னை பொறுத்தவரை அவர் எந்த ஒரு தவறையும் செய்யவில்லை. தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார். ஆனாலும் அவருக்கான வாய்ப்பு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கிடைக்காமல் போகிறது வருத்தமாக இருக்கிறது.
இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சுப்மன் கில் எடுத்துள்ள முடிவு – விவரம் இதோ
நமது அணியில் ஏகப்பட்ட திறமையான வீரர்கள் இருந்தாலும் தேர்வுக்குழுவினர் ஜெய்ஸ்வால் போன்ற ஒரு இளம் வீரர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் ஒரு கிளாஸ் பிளேயர் என்பதை பலமுறை நிரூபித்துள்ளார். எனவே அபிஷேக் சர்மாவுடன் அவர் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்றும் தான் விரும்புவதாக திலீப் வெங்சர்க்கார் கூறியது குறிப்பிடத்தக்கது.



