இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்பராஸ் கான் மிகுந்த போராட்டத்திற்கு பின் 2024ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அறிமுகத் தொடரிலேயே அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்த அவர் நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது தனியாளாக 150 ரன்கள் குவித்து அசத்தினார். இருப்பினும் அப்போதிலிருந்து அவருக்கு இந்தியாவுக்காக விளையாட மறுவாய்ப்பு கிடைக்கவில்லை.
இதற்கிடையே காயமடைந்து குணமடைந்த சர்பராஸ் கான் 2025 சயீத் முஸ்டாக் அலி மும்பைக்காக அதிரடியாக விளையாடி தன்னுடைய டி20 ஆட்டத்தை மெருகேற்றியுள்ளார். அதனால் ஐபிஎல் 2026 ஏலத்தில் சிஎஸ்கே அணி அவரை வாங்கியுள்ளது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. அதே வேகத்தில் தற்போது 2025 விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் அவர் கோவாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 157 (75) ரன்கள் விளாசினார்.
திறமையான சர்பராஸ் கான்:
குறிப்பாக டெஸ்ட் பேட்ஸ்மேனாக அறியப்படும் சர்பராஸ் கான் 14 சிக்ஸர்களை பறக்க விட்டு தம்மால் அதிரடியாக விளையாட முடியும் என்பதையும் நிரூபித்தார். இந்நிலையில் நல்ல திறமையுடைய சர்பராஸ் கானுக்கு டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய எந்த வகையான ஃபார்மெட்டிலும் வாய்ப்பளிக்காதது அவமானம் என்று முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்கார் இந்திய அணி நிர்வாகத்தை விமர்சித்துள்ளார்.
இது பற்றி அவர். “சர்பராஸ் கான் இந்தியாவுக்காக எந்த பார்மட்டிலும் தேர்ந்தெடுக்கப்படாதது எனக்கு குழப்பம் அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. ஏனெனில் உள்ளூரில் நிலையாக அசத்தி வரும் அவர் இந்தியாவுக்காகவும் வாய்ப்பு கிடைத்த போது நன்றாக விளையாடியுள்ளார். தரம்சாலாவில் அவரும் தேவ்தூத் படிக்கலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சேர்ந்து பேட்டிங் செய்ததை நான் பார்த்தேன்”
வெங்சர்கார் விமர்சனம்:
“அது மிகவும் முக்கியமான செஷனாக இருந்தது. அங்கே அழகாக பேட்டிங் செய்த அவர்கள் மிகவும் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதுவே அந்த டெஸ்ட் போட்டியை இந்தியா வெல்வதற்கு உதவியது. அதன் பின் அவருக்கு இந்தியாவுக்காக விளையாட மற்றொரு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய தொடரில் தேர்வான அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை”
இதையும் படிங்க: 2026 புத்தாண்டில் இந்திய அணி விளையாட உள்ள அணைத்து தொடர்களின் அட்டவணை.. ஸ்பெஷல் பதிவு
“அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காதது உண்மையாகவே எனக்கு குழப்பத்தைக் கொடுக்கிறது. ஏனெனில் ஆல் ஃபார்மட்டிலும் அவர் விளையாடுவதற்கு போதுமானவர். இருப்பினும் அப்படிப்பட்ட திறமை புறக்கணிக்கப்பட்டு தவிர்க்கப்படுகிறது என்பது உண்மையான அவமானமாகும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சர்பராஸ் கான் சிஎஸ்கே அணிக்காக விளையாடி தன்னுடைய அதிரடியான திறமையை நிரூபிக்க தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.



