
இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டரசன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இளம் இந்திய அணி சமன் செய்தது. அதிலும் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கிள் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்த மிகப்பெரிய தொடரில் இரு அணிகளைச் சேர்ந்த எந்த வேகப்ப்பந்து வீச்சாளராலும் முழுமையாக 5 போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஆனால் முகமது சிராஜ் மட்டும் முழுமையாக விளையாடி அதிக விக்கெட்டுகளை (23) எடுத்த வீரராக சாதனை படைத்தார். மறுபுறம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
அந்த 3 போட்டிகளில் அவர் 2 முறை 5 விக்கெட்டுகள் எடுத்தப் போதிலும் இந்திய அணி வெற்றி பெறவில்லை. அதன் காரணமாக ஜஸ்ப்ரித் பும்ராவை ஒரு தரப்பினர் விமர்சித்து வருகிறார்கள். இருப்பினும் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் முழுமையாக விளையாடிய அவர் முதுகில் சந்தித்த காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதனாலேயே தற்போது இங்கிலாந்தில் அவரால் முழுமையாக விளையாட முடியவில்லை என்றே சொல்லலாம்.
இந்நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பும்ராவை முக்கியமற்ற ஐபிஎல் 2025 விளையாட பிசிசிஐ அனுமதித்திருக்காமல் நேரடியாக இந்தியாவுக்காக களமிறங்க வைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்கார் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட ரன்கள், எடுக்கப்பட்ட விக்கெட்டுகளை யார் நினைத்துக் கொண்டிருப்பார்கள்”
“ஆனால் இங்கிலாந்தில் சிங்கம் போன்ற இதயத்துடன் முகமது சிராஜ் வெளிப்படுத்திய செயல்பாடுகளை மக்கள் மறக்க மாட்டார்கள். சுப்மன் கில், ராகுல், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோருடைய பேட்டிங் வாஷிங்டன் சுந்தரின் சூப்பரான ஆல் ரவுண்டர் செயல்பாடுகளை மக்கள் மறக்க மாட்டார்கள். அதே சமயம் ஜஸ்ப்ரித் பும்ரா சில போட்டிகளில் விளையாடாததற்காக நீங்கள் குறை சொல்ல முடியாது”
இதையும் படிங்க: அகர்கர் அவங்கிட்ட பேசி பும்ராவை முழுசா ஆட வெச்சிருந்த இந்தியா கோப்பை ஜெய்ச்சுருக்கும்.. வெங்சர்கார் பேட்டி
“ஏனெனில் பும்ரா முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவருடைய விஷயத்தில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பை நீங்கள் கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் இந்தியாவுக்காக விளையாடும் போதெல்லாம் அவர் தன்னுடைய அனைத்தையும் கொடுத்துள்ளார். எனவே போதுமான ஓய்வுக்கு பின் அவர் முழுமையான உடல்தகுதியுடன் இந்திய அணிக்கு மீண்டும் விளையாடுவார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.