ஆஸ்திரேலியா ஏ கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா ஏ அணி 2 போட்டிகள் கொண்ட பயிற்சி டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ வென்ற நிலையில் இரண்டாவது போட்டி நவம்பர் 7ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சுமாராக விளையாடி 161 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கேஎல் ராகுல், சாய் சுதர்சன், கேப்டன் ருதுராஜ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் 11-4 என ஆரம்பத்திலேயே இந்தியா தடுமாறியது. அப்போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய துருவ் ஜுரேல் 80 (186) ரன்கள் குவித்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றினார். ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக மைக்கேல் நீசர் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
அசத்திய ஜுரேல்:
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா ஏ அணி 223 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க்கஸ் ஹாரிஸ் 74, ஜிம்மி பெர்சன் 30, ரூச்சிஒலி 35 ரன்கள் எடுத்தனர். இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 4, முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அதன் பின் களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு மீண்டும் அபிமன்யு ஈஸ்வரன் 17, ராகுல் 10, சாய் சுதர்சன் 3, கேப்டன் ருதுராஜ் 11, படிக்கல் 1 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்கள்.
அதனால் 56-5 என திணறிய இந்தியா ஏ 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது மீண்டும் நங்கூரமாக விளையாடிய இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜுரேல் 68 (122) ரன்கள் குவித்து ஓரளவு காப்பாற்றினார். அவருடன் நித்திஷ் ரெட்டி 38, டானுஷ் கோடியான் 44, பிரசித் கிருஷ்ணா 29 ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா ஏ 229 ரன்கள் குவித்தது.
வாய்ப்பு கொடுங்க:
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு அதிகபட்சமாக ரூச்சிஒலி 4, வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இறுதியில் 168 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா ஏ அணிக்கு சாம் கோன்ஸ்டஸ் 73*, வெப்ஸ்ஸ்டார்ட் 46* ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
இதையும் படிங்க: அடுத்த டெஸ்ட் கேப்டன் யார்? கவுதம் கம்பீரிடம் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ
அடுத்து நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் தொடருக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற இத்தொடரில் இந்தியா ஏ அணி 2 – 0 (2) என்ற கணக்கில் தோல்வியையே சந்தித்துள்ளது. இருப்பினும் 2வது போட்டியில் இணைந்து தன்னுடைய வாழ்வில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய துருவ் ஜுரேல் 80, 68 என மொத்தம் 148 ரன்கள் குவித்து அசத்தினார். எனவே அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் அவருக்கு கேஎல் ராகுல் போன்ற வீரர்களுக்கு பதிலாக வாய்ப்பு கொடுக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.



