இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கும் அத்தொடரில் வெற்றி பெறுவதற்காக இந்திய அணி தயாராகி வருகிறது. அத்தொடரில் இந்திய அணிக்காக துருவ் ஜுரேல் சாதாரண பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக 2024 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர் 2வது போட்டியிலேயே அபாரமாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்றார். அப்போதிலிருந்து ரிஷப் பண்ட் காயமடையும் போதெல்லாம் விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை பெறும் ஜுரேல் நல்ல ரன்கள் அடித்து வருகிறார். கடைசியாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரின் 2வது போட்டியில் சதத்தை அடித்த அவர் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு 2வது ஆட்டத்தில் 2 சதங்கள் அடித்தார்.
எங்களுக்குள்ள போட்டியில்ல:
எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் ஜுரேலை விளையாட வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கிறது. ஆனால் யாருக்கு பதிலாக அவரை விளையாட வைப்பது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனில் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த ரிஷப் பண்ட் மீண்டும் விளையாடத் வாங்கியுள்ளார்.
அது போன்ற சூழ்நிலையில் 3வது இடத்தில் இதுவரை தடுமாற்றமாகவே விளையாடி வரும் சாய் சுதர்சனுக்கு பதிலாக ஜூரேலை விளையாட வைக்கலாம் என்று சில முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியில் தமக்கும் ரிசப் பண்ட்டுக்கும் போட்டியில்லை என்று ஜுரேல் தெரிவித்துள்ளார். வாய்ப்பு கிடைத்தால் தாங்கள் இருவரும் சேர்ந்து விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவை ஜெய்த்தால் போதும்:
இது பற்றி ஜுரேல் பேசியது பின்வருமாறு. “எனக்கும் ரிஷப் பண்ட் பாய்க்கும் இடையே எந்த போட்டியும் இல்லை. நாங்கள் இருவருமே நாட்டுக்காக விளையாடுகிறோம். எனவே இந்தியாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே எங்களுடைய குறிக்கோள். அந்த வாய்ப்பில் யார் விளையாடினாலும் எனக்கு மகிழ்ச்சி. ஒருவேளை நாங்கள் ஒன்றாக விளையாடினாலும் அது நன்றாக இருக்கும். எங்களுடைய கவனம் அணியை வெற்றி பெற வைப்பதில் மட்டுமே இருக்கும்”
இதையும் படிங்க: அவருக்கு 23 கோடிலாம் ரொம்ப அதிகம்.. அவரை டீமை விட்டு வெளிய அனுப்புங்க – ஆரோன் பின்ச் கருத்து
“அணியின் வெற்றிக்காக பங்காற்ற முடியும் என்ற தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரு வீரராக களத்துக்குச் சென்று உங்களுடைய அணியின் வெற்றிக்கு ஏதாவது பங்காற்றி விட்டு திரும்பும் போது இருக்கும் உணர்வே சிறந்த உணர்வாகும். ஒவ்வொரு முறை களத்துக்குச் செல்லும் போது அச்சமயத்தில் அணிக்கு என்ன தேவை என்று சிந்தித்து அதற்கு தகுந்தார் போல் நான் விளையாடுகிறேன்” எனக் கூறினார்.



