வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியின் இரண்டாம் நாளான இன்றே 286 ரன்கள் முன்னிலை பெற்று விட்டது. இதன் காரணமாக இந்த போட்டியில் இந்திய அணி மிக எளிதாக வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
முதல் டெஸ்ட் சதத்தை அருமையாக கொண்டாடிய துருவ் ஜுரேல் :
இந்த போட்டியில் விளையாடிய இந்திய வீரர்களில் மூன்று பேர் சதம் அடித்துள்ளது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் துவக்க வீரரான கே எல் ராகுல் 100 ரன்களுக்கும், துருவ் ஜுரேல் 125 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறிய வேளையில் ஜடேஜா 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
இன்றைய போட்டியில் மூன்று வீரர்கள் சதம் அடித்திருந்தாலும் அதில் துருவ் ஜுரேல் அடித்த சதம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது காயம் ஏற்பட்டு ரிஷப் பண்ட் வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக மாற்றுத் துவக்க வீரராக அணியில் இடம் பிடித்த ஜுரேல் தனது ஆறாவது போட்டியிலேயே சதம் அடித்து தனது தேர்வை நியாயப்படுத்தி உள்ளார்.
திறமை வாய்ந்த வீரராக பார்க்கப்படும் துருவ் ஜுரேலின் இந்த ஆட்டம் ரிஷப் பண்ட்டிற்க்கும் ஒரு சவாலை ஏற்படுத்தி உள்ளது என்று கூறலாம். இந்நிலையில் இன்றைய போட்டியில் போது அரைசதம் கடந்த நிலையில் சல்யூட் அடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர் சதத்தை எட்டிய பிறகு தனது பேட்டை உயர்த்தி அதனை வலம் இருந்து இடது புறமாக சுத்தி இந்திய ராணுவத்தின் பாணியில் ஒரு கம்பீரமான சல்யூட் முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இப்படி இரு விதமான வித்தியாசமான கொண்டாட்டத்தில் அவர் ஈடுபட என்ன காரணம்? என்பது குறித்த ஒரு சிறிய தகவலை இங்கு காணலாம். அந்த வகையில் தனது தந்தை நேம் சந்த் இந்திய ராணுவத்தில் பங்காற்றியவர் என்பதாலும் குறிப்பாக 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரிலும் அவர் நாட்டிற்காக போராடிய வீரர் என்பதனால் தான் அடித்த அரை சதத்தை சல்யூட் அடித்து அவருக்கு அர்ப்பணித்ததாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க : சதம் அடித்ததும் வித்தியாசமாக கொண்டாடிய கே.எல் ராகுல்.. பாசக்கார தந்தை – நெகிழ்வைத்த சம்பவம்
பின்னர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தினை அடித்தபோது தனது பேட்டை ஆயுதமாக மாற்றி தனது தந்தைக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ராணுவ வீரர்களுக்கும் மரியாதையை செய்யும் வகையில் அனைவருக்கும் சல்யூட் என்கிற அர்த்தத்தின் படி அவர் சதத்தை கொண்டாடியதாக கூறியுள்ளார்.



