இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்த தொடரில் தவான் காயம் காரணமாக விலகியதையடுத்து டி20 போட்டிகளில் ராகுல் மீண்டும் துவக்க வீரராக இறங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி இந்த தொடரை அருமையாக பயன்படுத்திய ராகுல் ஓபனராக தனது சிறப்பான ஆட்டத்தை இந்த தொடர் முழுதும் வெளிப்படுத்தினார்.
முதல் போட்டியில் அரைசதம் அடித்த ராகுல் இறுதிப்போட்டியான இந்தப் போட்டியிலும் 91 ரன்களை குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் இந்த தொடரில் 163 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகவும் திகழ்ந்தார். மேலும் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார்.
ஒட்டுமொத்தமாக பார்த்தாலும் ராகுல் டி20 போட்டியில் சிறப்பான சராசரியும், ஸ்ட்ரைக்ரேட்டும் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி டி20 போட்டியில் ரோஹித், ரெய்னாவுக்கு அடுத்து ராகுல் சதமும் அடித்துள்ளார். மேலும் ஐ.பி.எல் மற்றும் உள்ளூர் போட்டி என அனைத்து தொடரிலும் அவர் அசத்தி வருவதால் ராகுலை இந்திய அணி 2020 டி20 உலகக்கோப்பையில் ஓப்பனராக களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதன்காரணமாக தவான் டி20 போட்டிகளுக்கு திரும்புவது கடினம் என்றே தெரிகிறது.
மேலும் டிசம்பர் 15 ஆம் தேதி சென்னையில் துவங்க உள்ள ஒருநாள் தொடருக்குமான அணியில் இருந்தும் தவான் காயம் காரணமாக தவான் விலகியுள்ளதால் ராகுலே ஒருநாள் அணியின் துவக்க வீரராக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.