பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயதாகும் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சி 2024இல் இந்திய அண்டர்-19 அணிக்காக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாடி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதனால் ஐபிஎல் தொடரில் அவரை வாங்கிய ராஜஸ்தான் அணி விளையாடும் வாய்ப்பையும் கொடுத்தது. அந்த வாய்ப்பில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த சூரியவன்சி குஜராத்துக்கு எதிரான போட்டியில் 35 பந்தில் வேகமாக சதமடித்த இந்திய வீரராக சாதனை படைத்தார்.
அத்துடன் இந்தியா ஏ அணிக்காகவும், இந்தியா அண்டர்-19 அணிக்காகவும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடர்களிலும் அவர் அதிரடியாக விளையாடிய வெற்றிகளில் பங்காற்றினார். 2025 அண்டர்-19 ஆசியக் கோப்பையிலும் அமீரகத்துக்கு எதிரான போட்டியில் அவர் 171 ரன்கள் குவித்து அசத்தினார். அதே வேகத்தில் 2025 விஜய் ஹசாரே கோப்பையில் அருணாச்சலப்பிரதேசத்திற்கு எதிராக சூர்யவன்சி 190 ரன்கள் விளாசினார்.
இதெல்லாம் கணக்கில்லை:
குறிப்பாக 59 பந்துகளில் 150 ரன்களை அடித்த அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் வேகமாக 150+ ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். இதற்கு முன் 2015இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஏபி டீ பில்லியர்ஸ் 64 பந்துகளில் 150+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அவருடைய அதிரடியால் 50 ஓவரில் 574 ரன்களை குவித்த பீகார் தமிழ்நாடை (502) முந்தி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து உலக சாதனை படைத்தது.
இந்நிலையில் பெரும்பாலும் பலவீனமான அணிகளுக்கு எதிராக அடிப்பதை வைத்து சூரியவன்சியை அவசரப்பட்டு இந்தியாவுக்காக தேர்வு செய்யக்கூடாது என்று தேவங்க் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய திறமையை சோதிக்க சூரியவன்சி உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வாளரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
டெஸ்டில் விளையாடுங்க:
“தேர்வாளர்களாக நீங்கள் இந்த சாதனைகளை எப்போதும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. பிசிசிஐ முன்முயற்சியுடன் செயல்பட வேண்டும். சூரியவன்ஷி போன்ற திறமையான வீரர்களுக்கு இணையான அமைப்பை உருவாக்க வேண்டும். சூரியவன்சி தனது வளர்ச்சிக்காக கடினமான முதல் தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்”
இதையும் படிங்க: இந்த ஸ்பெஷல் திறமையுடைய.. இஷான் மாதிரி பீட்டர்சன் கூட என்னை அடிச்சதில்லை.. ஹர்பஜன் பாராட்டு
“தற்போது அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுகிறார்கள். எனவே பிசிசிஐ அவருக்கு எந்த உள்ளூர் டெஸ்ட் தொடரில் வாய்ப்பளித்து திறமையை வெளிப்படுத்த வைக்கலாம் என்று பார்க்க வேண்டும். ஏனெனில் உள்ளூரில் அவர் போடும் உழைப்பு அர்த்தமற்றதாகக் கூடாது. நீண்ட காலமாக தரமற்ற கிரிக்கெட்டை விளையாடினால் அவரது ஆட்டத்தில் கெட்ட பழக்கங்கள் எளிதில் ஊடுருவி விடும்” என்று கூறினார்.



