கம் பேக்னா இப்படி இருக்கனும் ! பெங்களூருவை தெறிக்கவிட்ட சிங்கப்படை மாஸ் முதல் வெற்றி, வெற்றிநடை தொடருமா

CSK vs RCB 2
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டிக்கு முன் பங்கேற்ற 4 போட்டிகளிலும் வரிசையாக தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 10வது இடத்தை பிடித்த சென்னை இந்த போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கியது.  அந்த நிலையில் நவிமும்பையில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய சென்னைக்கு இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் 17 (16) ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார்.

RCB vs CSK Ruturaj

- Advertisement -

அந்த நிலையில் அடுத்து களமிறங்கிய மொயின் அலி 3 (8) ரன்கள் எடுத்திருந்தபோது தேவையின்றி ரன் அவுட்டானதால் 36/2 என தடுமாறிய சென்னைக்கு மீண்டும் 5-வது தோல்வி உறுதி என அந்த அணி ரசிகர்கள் கவலை அடைந்தனர். ஆனால் அப்போது களமிறங்கிய இளம் வீரர் சிவம் துபே மற்றொரு தொடக்க வீரர் ராபின் உத்தப்பாவுடன் இணைந்து சென்னையை மீட்டெடுக்க போராடினார்.

மாஸ் காட்டிய உத்தப்பா – துபே:
விக்கெட் விழுந்ததால் ஆரம்பத்தில் நிதானத்தை காட்டிய இந்த ஜோடி ஒருசில ஓவர்களுக்கு பின் பெங்களூரு பந்துவீச்சாளர்களை அதிரடி சரவெடியாக எதிர்கொண்டு ரன்களை குவித்தனர். நேரம் செல்ல செல்ல பெங்களூரு பவுலர்களுக்கு கருணை காட்டாத இந்த ஜோடி பவுண்டரிகளை விட சிக்சர்களை அதிகமாக பறக்கவிட்டு மைதானத்தில் ரன் மழை பொழிய தொடங்கினார்கள். அதற்கு ஏற்றார்போல் ஆரம்பத்தில் அற்புதமாக வீசிய பெங்களூர் பவுலர்கள் இவர்களின் அதிரடி ஆட்டத்திற்கு சரணடைந்து அதன்பின் ரன்களை வாரி வழங்கும் வள்ளல் பரம்பரையாக மாறினார்கள்.

Shuvam Dube Robin Uthappa

தொடர்ந்து பெங்களூருவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் அதன் கேப்டன் டு பிளேஸிஸ் திகைத்துப் போய் நிற்க மறுபுறம் வெளுத்து வாங்கிய இவர்கள் இருவருமே அரைசதம் கடந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாக மாட்டேன் என அடம் பிடித்தார்கள். இப்படி ஆரம்பத்தில் அமைதியாக நின்று அதன் பின் அன்னியனாக உருமாறி ருத்ரதாண்டவம் ஆடிய இந்த ஜோடியில் ஒருவழியாக 19-வது ஓவரில் 165 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த போது 50 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 9 மெகா சிக்ஸர்கள் உட்பட 88 ரன்கள் எடுத்த ராபின் உத்தப்பா ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சென்னை மாஸ் பவுலிங்:
மறுபுறம் தொடர்ந்து பட்டையைக் கிளப்பிய ஷிவம் துபே கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்தால் சதம் அடிக்கலாம் என்ற நிலையில் சிங்கிள் மட்டுமே எடுத்தாலும் 46 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 8 இமாலய சிக்சர் உட்பட 95* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர்களின் மிரட்டலான ஆட்டத்தால் 36/2 என திண்டாடிய சென்னை 20 ஓவர்களில் 216/4 என்ற பெரிய ரன்களை எட்டியது. அதை தொடர்ந்து 217 என்ற மெகா இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு இலங்கை பவுலர் மகேஷ் தீக்ஷனா ஆரம்பத்திலிருந்தே தொல்லை கொடுத்தார்.

ஏனெனில் அந்த அணியின் கேப்டன் டு பிளேஸிசை 8 (9) ரன்களில் அவர் காலி செய்ய அடுத்து வந்த நட்சத்திரம் விராட் கோலியை முகேஷ் சவுத்திரி 1 ரன்னில் அவுட்டாகினார். மற்றொரு தொடக்க வீரர் அனுஜ் ராவத்தை 12 (16) ரன்களில் மீண்டும் அவுட் செய்த தீக்சனா ஆரம்பத்திலேயே போட்டியை சென்னையின் பக்கம் திருப்பினார். இதனால் 42/3 என தடுமாறிய பெங்களூருவுக்கு அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக 26 (11) ரன்களை எடுத்து ஆட்டமிழக்க 50/4 என மீண்டும் தடுமாறிய பெங்களூருவை இளம் வீரர் பிரபு தேசாய் அதிரடியாக 34 (18) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினாலும் மீண்டும் தீக்சனா அவரை காலி செய்தார்.

கம் பேக் வெற்றி:
அதை தொடர்ந்து மற்றொரு இளம் வீரர் சபாஷ் அகமது தன் பங்கிற்கு அதிரடியாக 4 பவுண்டரிகள் உட்பட 41 ரன்கள் எடுத்து முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார். ஆனாலும் கடைசி நேரத்தில் சென்னையின் வெற்றிக்கு அச்சுறுத்தலாக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 34 ரன்கள் எடுத்து அவுட்டாக இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 20 ஓவர்களில் 193/9 ரன்களை மட்டுமே எடுத்து பெங்களூரு தோல்வி அடைந்தது. சென்னை சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய இலங்கை வீரர் மகேஷ் தீக்சனா 4 விக்கெட்டுகளையும் கேப்டன் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

CSK vs RCB 2

இதன் காரணமாக 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன் சென்னை இந்த வருடத்தின் முதல் வெற்றியை பதிவு செய்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. அதைவிட அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியடைந்த சென்னை “கம் பேக்னா இப்படி இருக்க வேண்டும்” என்பதற்கு அடையாளமாய் இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அதிரடியாக செயல்பட்டு வெற்றி பெற்றது அந்த அணி வீரர்களிடமும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அற்புதமான வெற்றியால் புள்ளி பட்டியலில் 10-வது இடத்தில் திண்டாடிக் கொண்டிருந்த சென்னை 2 பொன்னான புள்ளிகளைப் 9-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இனிவரும் போட்டிகளிலும் இதேபோல் அந்த அணியின் வெற்றி நடை தொடர்ந்தால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement