
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த தீபக் சாகர் நடைபெற்று முடிந்த 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் மெகா ஏலத்தில் சென்னை அணியால் வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சவுதி அரேபியாவில் நடைபெற்ற இந்த ஏலத்தில் சென்னை அணி அவரை ஒன்பது கோடி வரை விலைக்கு வாங்க முயற்சித்தும் மும்பை அணி தீபக் சாகரை ஏலத்தில் எடுத்து விட்டது. இதன் காரணமாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்ற போது அணியின் முக்கிய பந்துவீச்சாளராக தீபக் சாகர் இருந்து வந்தார். ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே காயம் காரணமாக பெரிய அளவில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவரது பார்ம் எவ்வாறு இருக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும் சென்னை அணிக்காக எப்பொழுதுமே அசத்தி வந்த அவர் நிச்சயம் மீண்டும் சென்னை அணியால் தேர்வு செய்யப்படுவார் என்று ரசிகர்களும் நினைத்திருந்தனர்.
ஆனால் தற்போது மும்பை அணிக்கு சென்றுள்ள தீபக் சாஹர் சென்னை அணியால் தான் வாங்கப்படாமல் போனதற்கு என்ன காரணம்? என்பது குறித்தும், தோனியை தவற விடுவது குறித்தும் சில கருத்துக்களை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னுடைய ஆரம்ப கல கிரிக்கெட்டில் தோனி எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அவரின் தலைமையின் கீழ் நான் நிறைய விடயங்களை கற்றுக்கொண்டேன். இனி அவரின் அறிவுரைகளை தவறவிடுவேன்.
இம்முறையும் நான் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்படுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் ஏலத்தில் இரண்டாவது நாளில் தான் என்னுடைய பெயர் வந்ததால் சிஎஸ்கே அணி எவ்வளவோ முயற்சித்தோம் என்னை வாங்க முடியாமல் போனது. சிஎஸ்கே அணி என்னை வாங்க முடியாமல் போனதன் காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஏனெனில் இரண்டாம் நாளில் சிஎஸ்கே அணியிடம் 13 கோடி ரூபாய் தான் கையிருப்பு இருந்தது. ஆனாலும் அவர்கள் என்னை 9 கோடி ரூபாய் வரை ஏலம் கேட்டார்கள். அதற்கு மேல் நிச்சயம் அவர்களால் நிதியை ஒதுக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சிஎஸ்கே அணி இவ்வளவு தூரம் என்னை வாங்க முயற்சி செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : கண்டிப்பா அஷ்வினோட இடத்தை எதிர்காலத்தில் நிரப்பப்போவது இவர்தான் – ஹர்பஜன் சிங் கணிப்பு
தற்போது எனது மனதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன். இல்லையென்றால் சென்னை அணியில் இருந்து வெளியேறியது குறித்து நினைக்கும் போது கடினமாக இருக்கும். நான் தோனியை மிகவும் மிஸ் செய்வேன். நிச்சயம் சிஎஸ்கே அணிக்காக திரும்பி விளையாடும் வாய்ப்பு எதிர்காலத்தில் தனக்கு கிடைக்கும் என்றும் தீபக் சாகர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.