தீபக் சஹர் எப்போதாங்க வருவாரு!  ஏங்கிக்கொண்டிருக்கும் சென்னை ரசிகர்களுக்கு வந்த மகிழ்ச்சி செய்தி

deepak
- Advertisement -

கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் முதல் வாரத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அந்தப் போட்டியில் புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா தலைமையில் முதன்முறையாக களமிறங்கிய சென்னை பேட்டிங்கில் சொதப்பியதால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்து இந்த வருட ஐபிஎல் தொடரை தோல்வியுடன் துவங்கியது.

CSK-1

- Advertisement -

இருப்பினும் அந்த போட்டியில் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி 62/5 என சென்னை தடுமாறியபோது அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 50* ரன்களை விளாசி 2 வருடங்கள் கழித்து அரைசதம் அடித்து காப்பாற்றியது அந்த அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. கடந்த 2008 முதல் கேப்டனாக செயல்பட்டு 4 கோப்பைகளை வென்று கொடுத்த அவர் சமீப காலங்களாக ரன்கள் அடிக்க முடியாமல் திணறி வந்த வேளையில் இந்த வருடத்தின் முதல் போட்டியிலேயே பழைய பார்ம்க்கு திரும்பியது சென்னைக்கு மிகப்பெரிய பலமாக கருதப்பட்டது.

அடுத்தடுத்த தோல்வி:
போதாக்குறைக்கு முதல் போட்டியில் விசா கிடைக்காத காரணத்தால் பங்கேற்காத இங்கிலாந்து வீரர் மொய்ன் அலியும் பல தடைகளுக்கு பின் சென்னை அணியுடன் இணைந்ததால் 2-வது போட்டியில் வெற்றி நிச்சயம் என அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்றார்போல் லக்னோவுக்கு எதிராக தங்களது 2-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அதிரடி சரவெடியாக விளையாடி 210 ரன்களை குவித்தது. அந்த அணிக்கு ருதுராஜ் கைக்வாட் தவிர மற்ற அனைத்து வீரர்களும் தேவையான ரன்களை அடித்ததால் கண்டிப்பாக வெற்றி உறுதி என அனைவரும் நம்பினார்கள். ஆனால் சென்னை பேட்ஸ்மேன்கள் கஷ்டப்பட்டு அடித்த ரன்களை வள்ளல் பரம்பரையாக உருவெடுத்த சென்னை பவுலர்கள் மோசமாக பந்துவீசி ரன்களை வாரிவாரி வழங்கி வெற்றியையும் கோட்டை விட்டார்கள்.

CSK Lost to LSG

தீபக் சஹர் இல்லாத பின்னடைவு:
அதன் வாயிலாக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஐபிஎல் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை பதிவு செய்த பரிதாபத்திற்கு உள்ளாகியுள்ள சென்னை ஐபிஎல் 2022 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகிறது. இந்த தொடரில் 14 கோடிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட நட்சத்திர இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் காயத்தால் விலகியது அந்த அணியின் இந்த அடுத்தடுத்த தோல்விகளுக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த தொடருக்கு முன்பாக காயமடைந்த அவர் இல்லாத காரணத்தால் சென்னைக்கு பின்னடைவு ஏற்படும் என ஆரம்பத்திலேயே எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் அவரை தவிர சென்னை அணியில் வேறு ஒரு நல்ல தரமான இந்திய வேகப்பந்துவீச்சாளர் கிடையாது. அந்த நிலையில் எதிர்பார்த்தது போலவே லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஓரளவு சிறப்பாக பந்துவீசிய ப்ராவோ, பிரிடோரிஸ் மற்றும் இந்திய வீரர் முகேஷ் சவுத்ரி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு 4 ஓவர்கள் முடிந்த காரணத்தாலும் ஜடேஜா உள்ளிட்ட இதர பவுலர்கள் ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த காரணத்தாலும் கடைசி 2 ஓவர்களில் 34 ரன்கள் தேவை என்ற நிலைமையில் 19-வது ஓவரை வீச இளம் வீரர் சிவம் துபேவை சென்னை அழைத்தது. ஆனால் பொறுப்பில்லாமல் லோக்கல் போட்டியை போல பந்துவீசிய அவர் 25 ரன்களை வாரி வழங்கி சென்னையின் தோல்வியை உறுதி செய்தார்.

Dube

மீண்டும் வரும் தீபக் சஹர்:
இப்படி தீபக் சஹர் இல்லாத காரணத்தால் அடுத்தடுத்து அடி வாங்கி பரிதவிக்கும் சென்னை ரசிகர்களுக்கு அவர் எப்போது வருவார் என்ற நல்ல செய்தி வந்துள்ளது. ஐபிஎல் தொடருக்கு முன்பாக காயமடைந்த அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் அதிலிருந்து மீள்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். காயத்தில் இருந்து கிட்டத்தட்ட குணமடைந்த அவர் தற்போது களத்தில் இறங்கி விளையாடுவதற்கான பயிற்சிகளை செய்து வருவதை அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

- Advertisement -

தற்போது பெங்களூருவில் பயிற்சி எடுத்து வரும் அவர் இன்னும் 2 வாரங்களில் அங்கிருந்து வெளியே வந்து சென்னை அணியுடன் இணைய உள்ளார். தற்போதைய நிலைமை இப்படியே தொடரும் பட்சத்தில் வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது சென்னைக்காக அவர் விளையாடுவார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

Chahar4

இதனால் சென்னை ரசிகர்கள் ஓரளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றே கூறலாம். மேலும் கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியின்போது வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே லேசான காயமடைந்த நிலையில் மற்றொரு வீரர் கிறிஸ் ஜோர்டன் தொற்று காரணமாக 6 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : ரவி சாஸ்திரி சொன்னதை அப்படியே செய்து காட்டிய ஜாஸ் பட்லர் – மும்பை அணி செய்த தவறு என்ன?

இப்படி முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து பல்வேறு காரணங்களால் விலகியதால் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான 3-வது போட்டியில் மீண்டும் முகேஷ் சவுத்ரி , துசார் தேஷ்பாண்டே ஆகிய அனுபவமில்லாத இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு மீண்டும் சென்னை தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த போட்டிக்கு முன்பாக கிறிஸ் ஜோர்டான் குணமடைந்து விடுவார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

Advertisement