2 வருடம் தான் ஆகுது.. அந்த அனுபவத்தை வெச்சு இந்தியாவில் அசத்துவேன்.. நியூசி வீரர் மிட்சேல் பேட்டி

Daryll Mitchell
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் ஜனவரி 11ஆம் தேதி வதோதராவில் துவங்கும் அந்தத் தொடரில் வெல்வதற்காக இந்திய அணி தயாராகி வருகின்றது. அதே போல வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்பதற்கு நியூசிலாந்து அணியும் தயாராகி வருகின்றது.

இந்நிலையில் கடைசியாக 2023 உலகக் கோப்பையில் இந்திய மண்ணில் விளையாடியது தமக்கு நல்ல அனுபவத்தை கொடுத்ததாக நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்சேல் தெரிவித்துள்ளார். அந்தத் தொடரில் நியூஸிலாந்துக்காக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 9 போட்டிகளில் 552 ரன்கள் குவித்தார். குறிப்பாக மும்பையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான செமி ஃபைனலில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் சதமடித்து 134 (119) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

2023 உ.கோ அனுபவம்:

இருப்பினும் மற்ற வீரர்களைக் கட்டுப்படுத்திய இந்தியா உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு சென்றது. 2 வருடத்துக்கு முன் விளையாடிய அனுபவம் இம்முறை இந்தியாவில் பயன்படும் என்று மிட்சேல் தெரிவித்துள்ளார். அதை வைத்து நியூஸிலாந்து அணியின் வெற்றியில் பங்காற்றுவேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியாவில் அடுத்து மாதம் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காகவும் தங்களுடைய அணி தயாராகி வருவதாக மிட்சேல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உலகின் இந்தப் பகுதிகளுக்கு வந்து விளையாடுவது உங்களுக்கு சிறந்த சவாலாக இருக்கும். ஏனெனில் நியூசிலாந்து வீரராக இங்குள்ள மைதானங்கள் பற்றி உங்களுக்கு தெரியாது”

- Advertisement -

மிட்சேல் நம்பிக்கை:

“எனவே 2023 உலக கோப்பை உட்பட கடந்த சில வருடங்களாக இந்தியாவில் விளையாடிய அனுபவங்களையும் நேர்மறையான விஷயங்களையும் நான் எடுத்துக் கொள்கிறேன். நாங்கள் டி20 உலகக் கோப்பை நடைபெறும் மாதத்தையும் பார்க்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலைமையில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடரைப் பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டும்”

இதையும் படிங்க: 6, 4, 6, 4, 6, 4.. ஒரே ஓவரில் 30 ரன்ஸ்.. அபிஷேக்கை நொறுக்கிய சர்பாரஸ் கான்.. இந்திய வீரராக 2 புதிய வரலாற்று சாதனை

“நிகழ்காலத்தில் எங்களுடைய காலில் நின்று விளையாடுவது நல்ல சாவியாக இருக்கும். அதுவே எங்களுக்கு தற்சமயத்தில் சவாலாகவும் இருக்கிறது” என்று கூறினார். இதற்கிடையில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் டேரில் மிட்சேல் விளையாடியுள்ளார். அதனால் இந்தியாவில் உள்ள மைதானங்கள் பற்றி பெரும்பாலான நியூசிலாந்து வீரர்களுக்கு போதுமான அனுபவம் இருக்கும் என்றால் மிகையாகாது.

Advertisement