ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதனால் 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சந்தித்த தோல்வியிலிருந்து வெகுண்டெழுந்தது. முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தவில்லை.
மறுபுறம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 12000 ரன்கள் கடந்து அசத்தி வருகிறார். அதன் காரணமாக விராட் கோலியை விட ஜோ ரூட் சிறந்த வீரர் என்றும் சச்சின் சாதனையை அவர் உடைப்பார் என்றும் மைக்கேல் வாகன் உள்ளிட்ட நிறைய முன்னாள் வீரர்கள் பாராட்டினார்கள். அந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி சதத்தை அடித்தார்.
ஆஸியில் அசத்தல்:
அதையும் சேர்த்து ஆஸ்திரேலியாவில் அவர் மொத்தம் 7 சதங்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த ஆசிய வீரர் என்ற சச்சின் சாதனையை உடைத்து விராட் கோலி புதிய சாதனை படைத்தார். ஆனால் ஜோ ரூட் இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் கூட அடித்ததில்லை.
எனவே அவரை விட விராட் கோலி தான் சிறந்தவர் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேரன் லேமன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜோ ரூட் கிரேட் பிளேயர் தான். ஆனால் அவர் ஆல் டைம் கிரேட் பிளேயரா? இங்கே 3 – 4 ஆசஸ் தொடரில் விளையாடிய அவர் சதத்தை அடிக்கவில்லை. விராட் கோலி ஸ்மித் போன்றவர்கள் உலகின் அனைத்து சூழ்நிலையிலும் கடினமான அணிகளுக்கு எதிராக ரன்கள் குவித்துள்ளார்கள்”
லீமன் தேர்வு:
“அதுவே அவர்களுடன் ஜோ ரூட்டை ஒப்பிடுவதை தடுக்கிறது. அவர் சிறந்த வீரர். ஆனால் அவர்களுடன் இருக்கக்கூடியவர் அல்ல. அதனால் அவர்களுடன் நான் சேர்க்க மாட்டேன். நீங்கள் உலகின் அனைத்து இடங்களிலும் சதங்கள் அடிக்க வேண்டும். அதை ஸ்மித் செய்துள்ளார். வில்லியம்சன் செய்துள்ளார். விராட் கோலி, ரோஹித் சர்மாவும் செய்துள்ளனர். அவர்களே உலகத்தரம் வாய்ந்த வீரர்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க: இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தி வந்தாலும் ஐ.பி.எல் ஏலத்தில் சோகத்தை சந்தித்த வாஷிங்டன் சுந்தர் – என்ன நடந்தது?
அவர் கூறுவது போல விராட் கோலி ஆஸ்திரேலியாவில் 55க்கும் மேற்பட்ட சராசரியுடன் ஏழு சதங்கள் அடித்துள்ளார். ஆனால் ஜோ ரூட் ஆஸ்திரேலிய மண்ணில் 14 போட்டிகளில் 39.68 என்ற சுமாரான சராசரியை மட்டுமே வைத்துள்ளார். அங்கே இதுவரை சதத்தை அடிக்காத அவர் அதிகபட்சமாக 89 ரன்கள் அடித்துள்ளார்.



