தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக மிகச் சிறப்பாக பந்துவீசி 16 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். இந்த தொடரில் ஏகப்பட்ட யார்க்கர்களை அவர் வீசினார். அதிலும் குறிப்பாக டெல்லி அணிக்கு எதிராக ஒரு ஓவர் முழுவதும் தொடர்ச்சியாக யார்க்கர் வீசியிருந்தார். அவரின் இந்த திறமை அனைவரது கண்களிலும் பட்டது. இதன் காரணமாக உடனடியாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி அவருக்கு இடம் கொடுத்தது. முதன்முதலாக வலைப்பயிற்சியில் பந்துவீசும் பந்துவீச்சாளராக இருந்த இவர் வருண் சக்கரவர்த்திக்கு காயமான பின்னர் இந்திய அணியில் இடம்பிடித்தார்.
பின்னர் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்தது. அதன்பின்னர் சைனிக்கு பதிலாக அவருக்கு ஒருநாள் போட்டியின் போது அணியில் இடம் கொடுக்கப்பட்டது. முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத நடராஜன் மூன்றாவது போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அதனால் தான் சர்வதேச டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமாகினார்.
முதல் போட்டியில் 3 விக்கெட்டும் இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி தொடரை வெல்ல மிகப்பெரிய காரணமாக இருந்தார் நடராஜன். இந்த மிகச் சிறப்பான பந்துவீச்சு பற்றி பலரும் பாராட்டி வருகின்றனர். இந்திய வீரர்கள் மட்டுமல்லாது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா பாராட்டிப் பேசியிருக்கிறார்.
மேலும் இந்திய அணி ஒரு மிகச் சிறந்த பந்துவீச்சாளர் கிடைத்து விட்டதாகவும் அவருக்கு நான் ரசிகராக மாறிவிட்டதாகவும் ட்வீட் செய்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடவுள் இவருக்கு ஆசீர்வாதங்களை கொடுக்கவேண்டும். இந்திய அணியின் மிகச்சிறந்த வீரராக மாறிவிட்டார் தங்கராசு நடராஜன். அதேநேரத்தில் நடராஜனின் பந்துவீச்சுக்கு நான் ரசிகனாக மாறிவிட்டேன். அவர் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்திருக்கிறார் தனிஷ் கனேரியா.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் முடிவடைந்த பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூட இந்திய அணிக்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர் கிடைத்தது எங்கள் அணிக்கு கிடைத்த சொத்து என்றும் இவர் இதேபோன்று தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை டி20 தொடரில் முக்கிய வீரராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.