சூழ்நிலைக்கு உட்படுத்தி கொள்ளும் திறமையுள்ள அவருக்கு சான்ஸ் கொடுங்க – தமிழக வீரருக்கு வெட்டோரி பெரிய ஆதரவு

Vettori
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தும் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்திய அணியில் இடம் பிடித்திருந்த கிட்டத்தட்ட அதே வீரர்கள் இந்த உலக கோப்பை அணியிலும் இடம் பிடித்துள்ளனர். மேலும் காயத்திலிருந்து குணமடைந்தது திரும்பிய ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் சேர்க்கப்பட்ட நிலையில் காயத்தை சந்தித்த ரவீந்திர ஜடேஜா இந்த அணியிலிருந்து வெளியேறியுள்ளார். முன்னதாக இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் சேர்க்கப்பட்டது நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது.

Ravichandran Ashwin

- Advertisement -

ஒரு காலத்தில் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக விளையாடிய இவர் 2017இல் ஒருசில போட்டிகளில் சுமாராக பந்து வீசியதால் மொத்தமாக கழற்றி விடப்பட்டார். அதனால் அவருடைய வெள்ளைப் பந்து கேரியர் முடிந்ததாக அனைவரும் நினைத்த வேளையில் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்த அவருக்கு 4 வருடங்கள் கழித்து கடந்த 2021 டி20 உலக கோப்பையில் நேரடியாக வாய்ப்பு கிடைத்தது. அதில் முழுமையான வாய்ப்பு பெறாத அவர் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்ட நிலையில் கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரின் போது காயத்தை சந்தித்து வெளியேறினார்.

போராடும் அஷ்வின்:
அத்துடன் அவரை கண்டு கொள்ளாத தேர்வுக்குழு 2022 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக கேரியரில் முதல் முறையாக பேட்டிங்கில் அரை சதமடித்து பந்து வீச்சிலும் அசத்தி ஆல்-ரவுண்டராக செயல்பட்டார். ஆனாலும் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்களில் அவர் மீண்டும் சேர்க்கப்படவில்லை. அதனால் அவருடைய கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்த வேளையில் மீண்டும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வு செய்யப்பட்ட அவர் 6 விக்கெட்களை 6.66 என்ற சிறப்பான எக்கனாமியில் பந்து வீசினார்.

Ashwin

அதனால் சமீபத்திய ஆசிய கோப்பை தேர்வு செய்யப்பட்டு பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் மீண்டும் உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் முதன்மை ஸ்பின்னராக சஹால் இருப்பதாலும் சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக அக்சர் பட்டேல் இருப்பதாலும் உலகக்கோப்பையில் விளையாடும் 11 அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரவீந்திர ஜடேஜா காயமடைந்த நிலையில் அவரைப் போலவே தரமும் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவமும் கொண்ட அஷ்வினுக்கு எவ்வித தயக்கமின்றி வாய்ப்பு கொடுக்கலாம் என்று நியூசிலாந்து ஜாம்பவான் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வெட்டோரி ஆதரவு:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் அபாரமாக செயல்படுபவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தாலேயே தற்போதைய உலக கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் சூழ்நிலையை புரிந்து கொண்டு உடனுக்குடன் தங்களை உட்படுத்தி தேவைக்கு ஏற்ப செயல்படும் வீரர்களில் ஒருவர். அதனால் ஒருவேளை அவர் தேர்வு செய்யப்பட்டால் எவ்வாறு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது அவருக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் அவர் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளார்”

vettori

“குறிப்பாக அஸ்வின், ஜடேஜா போன்ற ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் கொண்டுள்ள தங்களது முதன்மையான திறமையை அனைத்து வகையான கிரிக்கெட்டிக்கும் ஏற்றாற்போல் மாற்றி சிறப்பாக செயல்படுவதை உங்களால் பார்க்க முடிகிறது. அவர்களது இடத்தில் நிறைய இளம் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களைப் பற்றி நான் அதிகம் பேச முடியாது. இருப்பினும் இளம் இந்திய ஸ்பின்னர்கள் நல்ல திறமைசாலிகள். ரவி பிஷ்னோய், ராகுல் சஹர் போன்றவர்கள் அழுத்தமான ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தவர்கள் என்பதால் எப்போதும் சிறப்பாக செயல்பட தயாராக உள்ளனர்” என்று கூறினார்.

அவர் கூறுவது போல அக்சர் படேல், சஹால் ஆகியோரை விட அதிகமான அனுபவம் கொண்ட அஷ்வின் 2015 உலகக் கோப்பை உட்பட ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே நிறைய அழுத்தமான போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். எனவே இந்த வயதிலும் இந்திய அணிக்குள் போராடி கம்பேக் கொடுத்துள்ள அவருக்கு வாய்ப்பளிக்கும் பட்சத்தில் நிச்சயமாக ஆஸ்திரேலியா சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார் என்பதில் உறுதியாக நம்பலாம்.

Advertisement