தரமான பிளேயர் தான்.. ஆனா அவர் இல்லாமையும் இந்திய அணியால் ஜெயிக்க முடியும்.. டேல் ஸ்டைன் கருத்து

Dale Styen 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா இரண்டாவது போட்டியில் வென்று தொடரை சமன் செய்துள்ளது. குறிப்பாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு இக்கட்டான சூழ்நிலையில் ஜெய்ஸ்வால் 209, சுப்மன் கில் 104 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார்கள்.

ஆனால் அவர்களை மிஞ்சி ஆட்டநாயகன் விருது வெல்லும் அளவுக்கு தேவையான நேரங்களில் ஓலி போப், பென் ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்த பும்ரா மொத்தம் 9 விக்கெட்டுகள் சாய்த்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதன் காரணமாக தற்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளார்.

- Advertisement -

தரமான வீரர் ஆனால்:
மேலும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வகையான ஐசிசி தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் பவுலர் என்ற உலக சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். அந்த வகையில் தற்சமயத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கு பந்து வீச்சு துறையில் அவர் இன்றியமையாத முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் பும்ரா மிகவும் தரமான வீரர் என்றாலும் அவர் இல்லாமல் வெற்றி பெற முடியாது என்ற நிலைமை இந்திய அணியில் இல்லை என முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டைன் கூறியுள்ளார். ஏனெனில் அடுத்து வரும் பவுலர்களும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு இந்திய கிரிக்கெட்டின் தரம் உயர்ந்துள்ளதாக பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்திய வீரராக இருந்தால் நிறைய பணிச்சுமை ஏற்படும். ஏனெனில் இந்தியாவில் நிறைய போட்டிகள் விளையாடப்படுகின்றன. அவர்கள் உலகில் அதிகம் தேடப்படும் அணிகளில் ஒன்றாகும். அதே சமயம் பும்ரா விளையாடாமல் போனால் அதற்காக உண்மையாக இந்திய அணி எதையும் தவற விடப்போவதில்லை. ஏனெனில் அடுத்ததாக காலடி வைக்கும் பவுலர்கள் தேவையான தரத்தைக் கொண்டிருக்கிறார்கள். அது இந்திய கிரிக்கெட்டுக்கு பெரும் வரவாகும்”

இதையும் படிங்க: 13 வருடம் 113 போட்டிகள்.. விராட் கோலியின் முடிவால்.. இந்திய அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு

“டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக செயல்படும் பவுலர்களால் டி20 போட்டிகளிலும் நன்றாக செயல்பட முடியும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதால் வேகத்தை மாற்றுவது, எப்போதும் மெதுவான பந்தை பயன்படுத்த வேண்டும், எப்போது பவுன்சர் வீச வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். எனவே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அசத்துவதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவது அவசியம் என்பதை அனைத்து பவுலர்களும் உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement