CSK vs GT : இன்னும் அதை மறக்க முடியல – ரிசர்வ் டே நினைச்சாலே பயமா இருக்கு, சிஎஸ்கே ரசிகர்கள் கவலை – காரணம் இதோ

Dhoni
- Advertisement -

கோடைகாலத்தில் கடந்த 2 மாதங்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2023 டி20 தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மே 28ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் மோதின. இருப்பினும் மழை காரணமாக மொத்தமாக ரத்து செய்யப்பட்ட அந்த போட்டி ரிசர்வ் நாளான இன்று மீண்டும் நடைபெற உள்ளது. அதில் 2008 முதல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை 5வது கோப்பையை வெல்லுமா அல்லது கடந்த வருடம் தோற்றுவிக்கப்பட்டு மிரட்டலாக செயல்படும் குஜராத் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் அப்போட்டியில் இந்தியாவுக்காக 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை கோப்பையை வெல்ல வேண்டும் என்பதை அந்த அணி ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. ஏனெனில் விரைவில் 42 வயதை தொடும் அவர் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருவதால் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்தியாவுக்காகவும் சென்னைக்காகவும் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் கோப்பையுடன் ஓய்வு பெற வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எண்ணமாகவும் இருக்கிறது.

- Advertisement -

ரிசர்வ் டே பயம்:
இருப்பினும் அதற்கு உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் மற்றும் அகமதாபாத் மைதானத்தை தனது கோட்டையாக மாற்றி எதிரணிகளை மிரட்டி வரும் பாண்டியா தலைமையிலான குஜராத் பெரிய இருக்கிறது. ஆனால் அவை அனைத்தையும் விட ரிசர்வ் டே என்ற வார்த்தையே சென்னை ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைப்பதாக இருக்கிறது என்றால் மிகையாகாது. ஏனெனில் அந்த வார்த்தையை கேட்கும் தோனி ரசிகர்களின் மனம் அப்படியே 2019 உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பயணிக்கிறது.

இங்கிலாந்தின் லண்டனில் இருக்கும் மான்செஸ்டரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து தடுமாற்றமாகவே செயல்பட்டு 50 ஓவர்களில் வெறும் 239/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் மழை வந்ததால் போட்டி அடுத்த நாளுக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ரிசர்வ் நாளில் மீண்டும் நடைபெற்ற அப்போட்டியில் மழை பெய்ததால் முற்றிலும் பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் மாட் ஹென்றி, ட்ரெண்ட் போல்ட் போன்ற நியூசிலாந்து பவுலர்கள் ஈரப்பதமான வானிலையை பயன்படுத்தி தாறுமாறாக ஸ்விங் செய்து ரோஹித் சர்மா 1, கேஎல் ராகுல் 1, கேப்டன் விராட் கோலி 1, தினேஷ் கார்த்திக் 6 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்தனர்.

- Advertisement -

போதாகுறைக்கு பண்ட் 32, பாண்டியா 32 ரன்களில் மிட்சேல் சாட்னர் பந்துகளில் அதிரடியாக விளையாட முயற்சித்து நடையை கட்டினர். அதனால் 71/5 என மொத்தமாக சரிந்த இந்தியாவை ரவீந்திர ஜடேஜாவுடன் கைகோர்த்த எம்எஸ் தோனி நங்கூரமாக நின்று மீட்டெடுக்க போராடினார். அதில் ஒரு கட்டத்திற்கு பின் ஜடேஜா அதிரடியை துவக்கி 77 (59) ரன்கள் விளாசி அவுட்டான நிலையில் மறுபுறம் கடைசி வரை மெதுவாகவே விளையாடிய தோனி கடைசி நேரத்தில் சிக்ஸரை அடித்து வெற்றிக்கு போராடினார்.

ஆனால் 49வது ஓவரில் சிங்கிள் எடுக்க முயற்சித்த போது மார்ட்டின் கப்தில் வேகத்தில் ரன் அவுட்டான அவர் முடிந்தளவுக்கு வெற்றிக்கு போராடி கண்ணீர் விடாத குறையாக சென்றது பல கோடி இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. மேலும் அதுவே அவருடைய சர்வதேச கிரிக்கெட்டின் கடைசி போட்டியாகவும் அமைந்தது ரசிகர்களால் இன்றும் மறக்க முடியவில்லை. அந்த வகையில் அடுத்த வருடம் அவர் விளையாடுவாரா என்பது தெரியாத நிலையில் இன்றைய ரிசர்வ் நாளில் என்ன ஆகுமோ என்று சென்னை ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:CSK vs GT : ரிசர்வ் டே-வான இன்று போட்டி எத்தனை மணிக்கு துவங்கும்? – இன்றும் மழை பெய்தால் என்ன ஆகும்?

இருப்பினும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து வென்றது போல் இம்முறையும் தோனி வெல்வார் என்று சில ரசிகர்கள் நம்பிக்கையும் தெரிவிக்கின்றனர்.

Advertisement