CSK vs GT : இன்றைய ஃபைனலுடன் ஓய்வு பெறும் நட்சத்திர சிஎஸ்கே வீரர் – அதிகாரப்பூர்வமான அறிவிப்பால் ரசிகர்கள் சோகமான பிரியா விடை

CSK MS Dhoni Ravindra Jadeja
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டி மே 28ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி அசத்திய முன்னாள் சாம்பியன் சென்னையை நடப்பு சாம்பியன் குஜராத் எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் காலம் காலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னையும் கடந்த 2 வருடங்களாகவே எதிரணிகளை தெறிக்க விடும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத்தும் சம பலத்துடன் மோதுவதால் கோப்பையை வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அத்துடன் விரைவில் 42 வயதை தொடும் எம்எஸ் தோனி முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருவதால் இந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்த மகத்தான அவர் அடுத்த வருடமும் விளையாட வேண்டும் என்பதே பெரும்பாலான முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்நிலையில் இன்றைய ஃபைனல் போட்டியுடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக சென்னைக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் அம்பத்தி ராயுடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

விடைபெறும் ராயுடு:
ஆந்திராவைச் சேர்ந்த அவர் கடந்த 2001 முதலே உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வந்த நிலையில் 2010ஆம் ஆண்டு முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட துவங்கினார். அப்போது முதல் 2017 வரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டு நிலையான இடத்தை பிடித்து வந்த அவர் 2013, 2015, 2017 ஆகிய வருடங்களில் மும்பை கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதை தொடர்ந்து 2018இல் சென்னைக்காக வாங்கப்பட்ட அவர் 603 ரன்கள் விளாசி 3வது கோப்பையை வென்று அபார கம்பேக் கொடுப்பதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

அத்துடன் 2013இல் இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி தடுமாற்றமாக செயல்பட்டாலும் 2018 வாக்கில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பையில் தேர்வாக தகுதியானவராக காத்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் 4வது இடத்தில் விளையாடுபவர் முப்பரிமாண வீரராக இருக்க வேண்டும் என்று கருதிய எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான அப்போதைய தேர்வுக்குழு அவரை கழற்றி விட்டு தமிழக வீரர் விஜய் சங்கரை தேர்வு செய்தது. அதனால் மனமுடைந்த அவர் 3டி ட்வீட் போட்டதை வன்மமாக எடுத்துக்கொண்ட தேர்வுக்குழு மேற்கொண்டு வாய்ப்பு கொடுக்காமல் மொத்தமாக கழற்றி விட்டது.

- Advertisement -

அதனால் மனமுடைந்த அவர் 2019இல் 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிளிருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். அப்படி சிலரின் வன்மத்தால் சர்வதேச கேரியர் முடிந்தாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அசத்தி வந்த ராயுடு 2021 சீசனில் சென்னை 4வது கோப்பையை வெல்வதற்கு உதவிகரமாக செயல்பட்டார். ஆனாலும் சமீப காலங்களில் உள்ளூர் தொடரிலும் விளையாடாமல் 37 வயதை நெருங்கிய காரணத்தால் தடுமாற்றமாக செயல்பட்டு வரும் அவர் இந்த சீசனில் 11 போட்டிகளில் 139 ரன்களை மட்டுமே எடுத்து எதிர்பார்ப்புக்கு நிகராக அசத்தவில்லை.

அதன் காரணமாக சற்று விமர்சனங்களையும் சந்தித்து வந்த அவர் இன்றைய குஜராத்துக்கு எதிரான ஃபைனலுடன் விடை பெறுவதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “மும்பை மற்றும் சென்னை எனும் மகத்தான 2 அணிகளில் 204 போட்டிகளில் 14 சீசன்களில் 11 பிளே ஆப் சுற்றில் 8 ஃபைனல்களில் விளையாடி 5 கோப்பைகளை வென்றுள்ளேன். இன்று இரவு 6வது கோப்பையை வெல்வேன் என்று நம்புகிறேன். இது சிறப்பான பயணம்”

இதையும் படிங்க:IPL 2023 : ஹிட்மேனுக்கு பவர் போய் பல வருஷம் ஆச்சு, 2017 முதலே திணறும் ரோஹித் சர்மா – மும்பை ரசிகர்களே கடுப்பாகும் புள்ளிவிவரம்

“இருப்பினும் இன்று இரவு நடைபெறும் ஃபைனல் என்னுடைய கடைசி ஐபிஎல் போட்டி என்பதை முடிவு செய்துள்ளேன். இந்த மகத்தான தொடரில் மகிழ்ச்சியாக விளையாடினேன். இந்த முடிவில் யூடர்ன் அடிக்கப் போவதில்லை” என்று கூறியுள்ளார். அதனால் சோகமடைந்துள்ள சென்னை ரசிகர்கள் சரியான தருணத்தில் சிறந்த முடிவை எடுத்துள்ள அவருக்கு இந்த ஃபைனலில் 6வது கோப்பையை வென்று விடை பெறுமாறு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

Advertisement