காயத்தால் விலகிய டேவோன் கான்வேவுக்கு பதில்.. சிஎஸ்கே அணி வாங்கிய இங்கிலாந்து வீரர் யார்?

Richard Gleeson
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் புதிய கேப்டன் ருதுராஜ் கைக்வாட் தலைமையில் கோப்பையை தக்க வைக்கும் பயணத்தில் சென்னை போராடி வருகிறது. முன்னதாக இந்த தொடரில் சென்னை அணியின் துவக்க வீரர் டேவோன் கான்வே காயத்தால் விளையாடவில்லை.

நியூஸிலாந்தை சேர்ந்த அவர் கடந்த வருடம் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து சென்னை 5வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். இருப்பினும் இம்முறை காயத்தை சந்தித்த அவர் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதியில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது. மறுபுறம் காயமடைந்த அவருக்கு பதிலாக நியூசிலாந்தை சேர்ந்த மற்றொரு இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அணிக்காக துவக்க வீரராக விளையாடி வருகிறார்.

- Advertisement -

விலகிய கான்வே:
குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த அவரை 1.80 கோடிக்கு வாங்கிய சென்னை நிர்வாகம் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பைக் கொடுத்தது. அந்த வாய்ப்பில் முதலிரண்டு போட்டிகளில் அதிரடியாக விளையாடிய அவர் அதன் பின் சற்று தடுமாற்றமாக விளையாடி இதுவரை 6 இன்னிங்ஸில் 133 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்நிலையில் காயம் இன்னும் குணமடையாததால் ஐபிஎல் 2024 தொடரிலிருந்து டேவோன் கான்வே முழுமையாக விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் க்ளீசன் எனும் வீரரை 50 லட்சம் அடிப்படை விலைக்கு வாங்குவதாகவும் சென்னை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 36 வயதாகும் வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் 2022 முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

அந்த வாய்ப்பில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அத்துடன் மொத்தமாக 90 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ள அவர் 101 விக்கெட்டுகளை 8.18 என்ற எக்கனாமியில் எடுத்துள்ளார். ஏற்கனவே ஏலத்தில் பங்கேற்ற போது எந்த அணியாலும் வாங்கப்படாத அவரை தற்போது சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியுள்ளது.

இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டிற்கு இந்த ரூல்ஸ் செட்டே ஆகாது.. எனக்கு சுத்தமா அது பிடிக்கல – ரோஹித் சர்மா வெளிப்படை

மொத்தத்தில் இதுவரை 23 ஐபிஎல் போட்டிகளில் 924 ரன்கள் குவித்து அசத்திய டேவோன் கான்வே காயத்தால் விலகியது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாகவே பார்க்க முடிகிறது. இதைத் தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி தங்களுடைய அடுத்த போட்டியில் ஏப்ரல் 19ஆம் தேதி லக்னோவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement