KKR vs CSK : ஜேசன் ராய், ரிங்கு சிங் அதிரடியை முறியடித்த பவுலர்கள் – புள்ளிப் பட்டியலில் புதிய உச்சம் தொட்ட சிஎஸ்கே

CSK vs KKR Theeksana
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 33வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அப்போட்டியில் தோனிக்காக ஏராளமான ரசிகர்கள் மஞ்சள் நிற உடையுடன் சேப்பாக்கத்துக்கு நிகராக ஆதரவு கொடுத்த நிலையில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு டேவோன் கான்வேயுடன் இணைந்து பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடி காட்டிய ருதுராஜ் கைக்வாட் 73 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த போது 2 பவுண்டரி 3 சிக்சருடன் 35 (20) ரன்களில் அவுட்டானார்.

அந்த நிலைமையில் களமிறங்கிய அஜிங்க்ய ரகானே அதிரடியாக விளையாடிய நிலையில் மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய டேவோன் கான்வே 4 பவுண்டரி 3 சிக்சருடன் 56 (40) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அப்போது வந்த சிவம் துபே மற்ற அனைவரையும் விட சரவெடியாக பேட்டிங் செய்து ரகானேவுடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னையை வழுப்படுத்தி 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 50 (21) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

உச்சத்தில் சென்னை:
ஆனால் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடி அரை சதமடித்த ரகானே கடைசி நேரத்தில் அதிரடியை அதிகப்படுத்தி 6 பவுண்டரி 5 சிக்சருடன் 71* (29) ரன்களை 244.83 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார். கூடவே ரவீந்திர ஜடேஜா 18 (8) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் 235/4 ரன்கள் குவித்த சென்னை இந்த சீசனில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அசத்தியது. சுமாராக செயல்பட்ட கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக கெஜ்ரோலியா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து 236 என்ற கடினமான இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு எதிர்பாரா வகையில் களமிறங்கிய சுனில் நரேன் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி செல்ல மறுபுறம் தடுமாறிய தமிழக வீரர் ஜெகதீசன் 1 (3) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 1/2 என்ற தடுமாற்றமான தொடக்கத்தை பெற்ற கொல்கத்தாவை இம்பேக்ட் வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 20 (20) ரன்களில் மொய்ன் அலி சுழலிலும் கேப்டன் நிதிஷ் ராணா அதிரடியாக விளையாட முயற்சித்து 4 பவுண்டரி 1 சிக்சருடன் 27 (20) ரன்களில் ஜடேஜாவின் சுழலிலும் சிக்கினார்.

- Advertisement -

அந்த நிலைமையில் ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் – ஜேசன் ராய் ஆகியோர் மிடில் ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு சென்னை பவுலர்களை வெளுத்து வாங்கினர். குறிப்பாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் 5வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்து 5 பவுண்டரி 5 சிக்சருடன் 61 (26) ரன்களை எடுத்து அச்சுறுத்தலை கொடுத்த போது மஹீஸ் தீக்சனா பந்தில் கிளீன் போல்டானார்.

அந்த நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் சிக்ஸரை பறக்க விட்டாலும் பதிரனா பந்தில் 9 (6) அவுட்டாக அடுத்து வந்த டேவிட் வீஸ் 1 (2) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது வந்த உமேஷ் யாதவ் 4 (4) ரன்னில் அவுட்டாகியும் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட ரிங்கு சிங் 3 பவுண்டரி 4 சிக்ச்ருடன் 53* (33) ரன்கள் எடுத்து போராடியும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 20 ஓவர்களில் கொல்கத்தா 186/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

அதனால் 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே மற்றும் தீக்சனா ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா என்ன தான் பேட்டிங்க்கு பிட்ச் சாதகமாக இருந்தாலும் அதற்காக கொஞ்சம் கூட கச்சிதமாக பந்து வீச தவறியதை பயன்படுத்திய சென்னை பேட்ஸ்மேன்கள் சரமாரியாக அடித்து நொறுக்கி அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர்.

இதையும் படிங்க: யாருமே நல்லாருக்கியான்னு ஒரு வார்த்தை கேட்கல, எல்லாரும் அதுல தான் குறியா இருந்தாங்க – விராட் கோலி ஆதங்க பேட்டி, காரணம் என்ன

ஆனால் அதே பிட்ச்சில் ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரசல் போன்ற முக்கிய வீரர்களை பெரிய ரன்களை குவிக்க விடாமல் பந்து வீச்சிலும் அசத்திய சென்னை பவுலர்கள் வெற்றியை உறுதி செய்தனர். அதனால் 7 போட்டிகளில் 5வது வெற்றியை பதிவு செய்த சென்னை புள்ளி பட்டியலில் ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகளை முந்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

Advertisement