வீடியோ : நல்லவேள நாளைக்கு பர்த்டே வரல, அந்த சிக்ஸர பார்த்து அதிர்ந்தோம் – விராட் கோலி பற்றி ஜிம்பாப்வே கேப்டன் பேசியது என்ன

Craige Ervine Virat Kohli
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்த வெற்றிக்கு இதுவரை 220* ரன்கள் குவித்து இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாகவும் ஒட்டு மொத்த டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாகவும் உலக சாதனை படைத்துள்ள நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முக்கிய காரணமாக திகழ்கிறார்.

அதிலும் குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களை சமீபத்திய ஆசிய கோப்பையில் சதமடித்து அடித்து நொறுக்கி பார்முக்கு திரும்பிய அவர் அதே புத்துணர்ச்சியுடன் இந்த உலகக் கோப்பையில் அட்டகாசமாக செயல்பட்டு தன்னை அணியிலிருந்து நீக்குமாறு சொன்ன அதே முன்னாள் வீரர்களை கைதட்டி பாராட்ட வைத்துள்ளார். அப்படி வீழ்வேன் என்று நினைத்தாயோ என்பது போல் மாஸ் கம்பேக் கொடுத்து இந்தியாவின் வெற்றி நாயகனாக மீண்டும் அவதரித்துள்ள விராட் கோலி நவம்பர் 5ஆம் தேதியன்று தன்னுடைய 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

- Advertisement -

ஹேப்பி பர்த்டே கிங்:
ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் ஒருசில சதங்களை அடிப்பதற்கே திணறும் பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் 3 வகையான கிரிக்கெட்டிலும் 50+ பேட்டிங் சராசரியுடன் 24000+ ரன்களையும் 71 சதங்களையும் விளாசி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் இந்தியாவின் ரன் மெஷினாக 34 வயதிலேயே தன்னை ஜாம்பவானாக நிரூபித்துள்ள அவருக்கு அனைத்து முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். அந்த வரிசையில் பிறந்த நாளை முடித்துவிட்டு நவம்பர் 6ஆம் தேதியன்று ஜிம்பாபேவுக்கு எதிரான போட்டியில் களமிறங்க பயிற்சிகளை செய்து வரும் விராட் கோலியின் பிறந்தநாளை இந்திய அணி நிர்வாகம் சார்பில் கேக் வெட்டப்பட்டு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் நல்ல வேளையாக நாளை பிறந்தநாள் வந்திருந்தால் தங்களை இன்னும் கூடுதலாக விராட் கோலி அடித்திருப்பார் என்று தெரிவிக்கும் ஜிம்பாப்வே கேப்டன் கிரைக் எர்வின் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதே சமயம் நாளைய போட்டியில் வெல்ல அவரது விக்கெட்டை எடுக்க முயற்சிப்போம் என்று கூறிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “உலகிலேயே சிறந்த வீரர்களைக் கொண்ட இந்திய அணிக்கு எதிராக பந்து வீச எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே அதில் சிறப்பாக செயல்பட்டு நல்ல முடிவுகளை காண நாங்கள் முயற்சிப்போம்”

- Advertisement -

“அதிலும் விராட் கோலி போன்ற ஒருவருடைய விக்கெட்டை உங்களது பாக்கெட்டில் போடுவதற்கு இதை தவிர எத்தனை வாய்ப்புகள் கிடைக்கும்? எனவே நாளைய போட்டியில் எங்களது வேகப்பந்து வீச்சாளார்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அத்துடன் நல்ல வேளையாக விராட் கோலியின் பிறந்த நாள் நாளை வராமல் இன்றே வந்து விட்டது. சிறந்த வீரரான அவருக்கு எதிராக நாங்கள் ஸ்பெஷலான எந்த திட்டமும் உருவாக்கவில்லை. இருப்பினும் எங்களது வீரர்கள் ஸ்பெஷல் வீரர்களை கொண்ட இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட முயற்சிப்பார்கள்” என்று கூறினார்.

முன்னதாக பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக 82* (53) ரன்கள் குவித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த விராட் கோலி ஹாரீஸ் ரவூப் வீசிய 19வது ஓவரில் பின்னங்காலில் நின்று நேராக பறக்க விட்ட சிக்சர் உலக அளவில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அந்த ஸ்பெஷலான இன்னிங்ஸ் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு க்ரைக் எர்வின் பேசியது பின்வருமாறு.

“அந்த கிரிக்கெட் போட்டியை நாங்கள் ஹோபார்ட் நகரில் இருந்து தொலைக்காட்சியில் பார்த்தோம். அந்த இன்னிங்ஸில் ஹாரிஸ் ரவூப் தலைக்கு நேராக அவர் சிக்ஸர் அடித்தார். அப்போது எங்கள் அணியில் இருந்த வீரர்கள் ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்டு “என்னப்பா இப்படி அடிக்கிறார்” என்ற வகையில் வியந்தோம். அது நம்ப முடியாத ஒன்று. அந்த வகையில் அவர் மிகச் சிறந்த வீரர்” என்று கூறினார். மேலும் 10க்கு 10 மதிப்பெண் அளவிற்கு முடிந்த வரை நாளைய போட்டியில் இந்தியாவை தோற்கடிக்க போராடுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement