5 பந்தில் 4 விக்கெட்ஸ்.. அமெரிக்காவை 115க்கு சுருட்டிய இங்கிலாந்துக்காக.. கிறிஸ் ஜோர்டான் 2 வரலாற்று சாதனை

- Advertisement -

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 23ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு பார்படாஸ் நகரில் 49வது போட்டி நடைபெற்றது. அந்த சூப்பர் 8 போட்டியில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. செமி ஃபைனல் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள இப்போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அமெரிக்காவுக்கு முதல் ஓவரிலேயே ஆண்ட்ரீஸ் கௌஸ் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது வந்த நிதீஷ் குமார் அதிரடியாக விளையாட முயற்சித்தார். ஆனால் எதிர்ப்புறம் தடுமாறிய ஸ்டீவன் டெய்லர் 12 (13) ரன்களில் ஆட்டமிழந்தார். அதே போல அடுத்ததாக வந்த கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

வரலாற்று சாதனை:
அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த நிதீஷ் குமாரும் 30 (24) ரன்களில் அடில் ரசித் சுழலில் போல்டானார். அதற்கடுத்ததாக வந்த மிலிந்த் குமார் 4 ரன்களில் கிறிஸ் ஜோர்டான் வேகத்தில் அவுட்டானார். அதைத்தொடர்ந்து வந்த ஹர்மீத் சிங் 21 (17) ரன்களில் சம் கரண் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

ஆனால் 19வது ஓவரை வீசிய கிறிஸ் ஜோர்டான் முதல் பந்தில் மறுபுறம் நங்கூரமாக விளையாட முயற்சித்த கோரி ஆண்டர்சனை 29 ரன்களில் அவுட்டாக்கினார். அதற்கடுத்த பந்தில் ரன் கொடுக்காத அவர் 3, 4, 5வது பந்துகளில் முறையே அலி கான், நோஸ்டுஷ் கெஞ்சிக், சௌரப் நேத்ராவல்கர் என அடுத்ததாக வந்த 3 பேட்ஸ்மேன்களையும் டக் அவுட்டாக்கினார். அந்த வகையில் தன்னுடைய 5 பந்துகளில் அவர் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

குறிப்பாக 19வது ஓவரின் 3, 4, 5வது பந்துகளில் அவர் அடுத்தடுத்த 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் 20 உலகக் கோப்பையிலும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை கிறிஸ் ஜோர்டான் படைத்துள்ளார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இங்கிலாந்து பவுலர் என்ற சாதனையும் கிறிஸ் ஜோர்டான் படைத்தார்.

இதையும் படிங்க: மும்பையை சேர்ந்த ரோஹித்துக்கு ஒரு நியாயம்.. கோலிக்கு ஒரு நியாயமா? கவாஸ்கரை விளாசும் ரசிகர்கள்

அவருடைய சாதனை பந்து வீச்சால் 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அமெரிக்கா 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டன் 4, சாம் கரண் 2, அடில் ரசித் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி 116 ரன்களை துரத்தி வருகிறது.

Advertisement