இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கிய அத்தொடரிலும் நட்சத்திர வேகக்பந்து வீச்சாளர் முகமது ஷமியை இந்திய அணி கழற்றி விட்டுள்ளது. 2023 உலகக் கோப்பையில் லேசான காயத்துடன் நெருப்பாக பந்து வீசிய அவர் இந்தியா ஃபைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவரால் 2024/25 ஆஸ்திரேலியா தொடர் வரை விளையாட முடியவில்லை. ஒருவழியாக ஒன்றரை வருடம் கழித்து குணமடைந்த ஷமி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் தேர்வாகி 8 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா கோப்பையை வெல்ல தம்முடைய பங்காற்றினர். ஆனால் அப்போதிலிருந்து இப்போது வரை முகமது ஷமி முழுமையாக ஃபிட்டாக இல்லை என்று சொல்லி தேர்வுக்குழு கழற்றி விட்டு வருகிறது.
ஷமி அவமானப்படுத்தாதீங்க:
இத்தனைக்கும் 2025/26 ரஞ்சிக் கோப்பையின் முதல் 2 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் எடுத்த அவர் பெங்கால் அணி அடுத்தடுத்த வெற்றிகளை பெற பங்காற்றினார். அத்துடன் தம்முடைய ஃபிட்னஸ் மற்றும் திறமையை நிரூபித்த அவருக்கு தென் ஆப்பிரிக்கா தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஞ்சிக் கோப்பையில் விளையாட ஃபிட்டாக இருக்கும் தம்மால் இந்தியாவுக்காக விளையாட முடியாதா? என்று ஷமி சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அப்படி எதிர்த்து கேள்வி கேட்டதால் கடந்த வாரம் நடைபெற்ற தென்னாபிரிக்க ஏ அணிக்கு எதிரான பயிற்சி தொடரில் கூட அவரை தேர்வுக்குழு இந்தியா ஏ அணிக்காக தேர்ந்தெடுக்கவில்லை. அதனால் இந்திய அணியில் முகமது ஷமியின் கேரியர் முடிவுக்கு வந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஷமியை வாய்ப்புக்காக அலைக்கழித்து அவமானப்படுத்தாமல் வாய்ப்பு முடிந்து விட்டது என்பதைத் தெளிவாக சொல்லுமாறு தேர்வுக்குழுவை புஜாரா கேட்டுக் கொண்டுள்ளார்.
புஜாரா விமர்சனம்:
ஷமி போன்ற சீனியரிடம் தேர்வுக்குழு மோசமாக நடந்து கொள்வது பற்றி அவர் விமர்சித்தது பின்வருமாறு. “முகமது ஷமி போன்றவரிடம் தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் நேர்மையாக பேச வேண்டும். வருங்காலத்தை நோக்கி என்ன திட்டம் வைத்திருக்கிறோம்? அதற்காக ஷமியை தேர்ந்தெடுக்க விரும்புகிறோமா? அல்லது இளம் வீரர்களை தேர்ந்தெடுக்கப் போகிறோமா? என்பது பற்றிய விவரங்களை அவரிடம் தேர்வாளர்கள் சொல்ல வேண்டும்”
இதையும் படிங்க: என்னால் கண்டிப்பா ரோஹித், கோலி இடத்தை நிரப்ப முடியாது.. ஆனால் இதை செய்ய முடியும் – ஜெய்ஸ்வால் வெளிப்படை
“ஒருவேளை உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாது என்று ஷமியிடம் சொல்லியிருந்தால் இனிமேல் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதும் விலகுவதும் அவரின் விருப்பம். இப்போதும் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார். எனவே இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தொடர்ச்சியாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதையே ஷமி விரும்புவார்” என்று சொன்னார்.



