தனது செல்ல மகளுக்கு ஈடன் கார்டன்ஸ் மைதான பெயரை வைத்துள்ள வெஸ்ட்இண்டீஸ் வீரர் – முழுவிவரம் இதோ

WI
- Advertisement -

கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பை தொடரை டேரன் சம்மி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பையும் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 2016 உலகக் கோப்பையையும் வெற்றி பெற்ற காரணத்தால் டி20 உலக கோப்பை வரலாற்றில் 2 கோப்பைகளை வென்ற ஒரே அணியாக இன்றுவரை உலக சாதனை படைத்துள்ளது.

Carlos Brathwaite 2016 t20 world cup

- Advertisement -

அந்த தொடரின் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளில் அசத்திய வெஸ்ட்இண்டீஸ் பைனலில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 156 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

மிரட்டிய கார்லஸ் ப்ரத்வைட்:
அதை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீரர் மார்லன் சாமுவேல்ஸ் ஆரம்பம் முதல் பொறுப்புடன் பேட்டிங் செய்து 85 ரன்கள் குவித்தார். பரபரப்பாக நடந்த அந்த பைனலில் கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 6 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்ட போது அந்த ஓவரை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் வீச அதை எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லஸ் ப்ரேத்வைட் யாருமே எதிர்பாராத வண்ணம் அதிரடியாக பேட்டிங் செய்தார்.

Carlos Brathwaite 2016 t20 world cup

அந்த கடைசி ஓவரில் முதல் 4 பந்துகளில் அடுத்தடுத்த 4 இமாலய சிக்சர்களை பறக்கவிட்ட அவர் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்தார் என்றே கூறலாம். பைனல் என்பதால் அந்த நேரத்தில் மற்ற பேட்ஸ்மேனாக இருந்திருந்தால் சிக்ஸர்களை அடிக்க யோசனை கூட செய்திருக்க மாட்டார்கள். ஆனால் தைரியமாக 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட ப்ரத்வைட் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச்சிறப்பான இன்னிங்சை ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

- Advertisement -

செல்ல மகளுக்கு பெயர்:
அத்துடன் அந்த ஒரு தருணம் இன்று வரை கார்லஸ் ப்ரேத்வைட் கிரிக்கெட் கேரியரில் ஒரு உச்சபட்ச நிகழ்வாக கருதப்படுகிறது. இந்நிலையில் தற்போது 33 வயது நிரம்பியுள்ள அவருக்கு அழகான செல்ல மகள் பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரத்வைட் அறிவித்துள்ளார்.

Brathwaite

இதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக தனது கிரிக்கெட் வாழ்நாளில் மறக்க முடியாத தருணத்தை கொடுத்த கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தின் பெயரை தனது செல்ல மகளுக்கு வைத்து கார்லஸ் ப்ரேத்வைட் பகிர்ந்துள்ளார். இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியது பின்வருமாறு. “இந்த பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஈடன் ரோஸ் ப்ரத்வைட், பிறந்த தேதி 2/06/2022. இந்த அழகு செல்லத்தை பெற்றெடுப்பதற்கு காத்திருந்தது வீண்போகவில்லை. உன்னை எப்போதும் இந்த தந்தை மனதார விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ள அவர் தனது மனைவிக்கு நன்றியை தெரிவித்துள்ளதுடன் மனைவி மற்றும் குழந்தை இருவரும் நலம் என ரசிகர்களிடையே தெறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ப்ரத்வேட்:
வெஸ்ட்இண்டீசில் இருக்கும் ஒருவர் தனது மகளுக்கு இந்தியாவில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற மைதானத்தின் ஒரு பகுதியை பெயராக சூட்டியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு பெருமையை கொடுத்துள்ளது என்றே கூறலாம். அந்த டி20 உலகக் கோப்பைக்குப் பின் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் கேப்டனாகும் வாய்ப்பை பெற்ற ப்ரத்வைட் தலைமையில் அந்த அணி பங்கேற்ற 30 போட்டிகளில் 11 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதனால் கேப்டன் பொறுப்பை இழந்த அவர் கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி இருந்தார். இருப்பினும் உலகம் முழுவதிலும் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வரும் அவர் இதற்கு முன் ஐபிஎல் தொடரில் டெல்லி, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் போன்ற அணிகளுக்காக விளையாடி இருந்தார். கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக 5 கோடிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட ப்ரத்வைட் விரைவில் நடைபெறும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement