
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி வரும் மார்ச் ஒன்பதாம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் செமி ஃபைனல் சுற்றில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. முன்னதாக எல்லைப் பிரச்சினை காரணமாக 2008 முதல் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.
அதே போலவே இம்முறையும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது என்று அறிவித்த காரணத்தால் இந்தியா அவர்களது போட்டிகளை துபாயில் விளையாடும் என்று ஐசிசி அறிவித்தது. அதன் அடிப்படையில் அட்டவணையும் வெளியிடப்பட்டது. அப்போது யாருமே அது பற்றி பேசவில்லை. ஆனால் துபாயில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று செமி ஃபைனலுக்கு சென்றதும் இந்தியாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சாதகம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
குறிப்பாக துபாயில் இந்தியாவுக்கு சாதகம் இருப்பதாக மைக்கேல் ஆதர்டன், நாசர் ஹுசைன், டேவிட் லாய்ட் போன்ற முன்னாள் வீரர்களும் பட் கமின்ஸ், வேன் டெர் டுஷன் உள்ளிட்ட இந்நாள் வீரர்களும் விமர்சித்தனர். இந்நிலையில் இந்தியா தங்களது திறமையால் தான் ஃபைனலுக்கு வந்துள்ளதே தவிர துபாய் மண்ணை வைத்து வரவில்லை என்று அவர்களுக்கு புஜாரா பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக இந்திய அணியின் தரமான 3 ஆல் ரவுண்டர்கள், 4 ஸ்பின்னர்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி புஜாரா பேசியது பின்வருமாறு. “இந்தியா நியாயமற்ற சாதகத்தைக் கொண்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை இந்தியா தோல்வியை சந்தித்திருந்தால் துபாயில் விளையாடியதால் தான் இந்திய அணி தோற்றது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். உண்மையில் தங்களது திறமை மற்றும் நிறைய ஆல் ரவுண்டர்களை கொண்டிருப்பதே இந்தியாவுக்கு சாதகமாகும்”
“நம்மிடம் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வருண், குல்தீப் ஆகிய 4 தரமான ஸ்பின்னர்கள் உள்ளனர். இதுவே மற்ற அணிகளில் பார்க்கும் போது 2 ஸ்பின்னர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் துபாய் மற்றும் பாகிஸ்தானில் தடுமாறுகிறார்கள். நம்மிடம் நல்ல சமநிலையும் சிறந்த ஆல் ரவுண்டர்களும் இருக்கிறார்கள்”
இதையும் படிங்க: இந்தியாவின் வருண் சக்ரவர்த்தியை சமாளிக்க நியூஸிலாந்து இதை செஞ்சா போதும்.. மைக் ஹெசன் பேட்டி
“ஹர்திக் பாண்டியா நம்முடைய சிறந்த ஆல் ரவுண்டராக இருக்கிறார். அவர்களுடன் டாப் ஆர்டரில் நமது பேட்டிங் நல்ல சமநிலையுடன் இருக்கிறது. இது போன்ற விஷயங்கள் தான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணங்களாக இருக்கிறது. ஒரே மைதானத்தில் விளையாடுவது காரணம் இல்லை” என்று விமர்சகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.